ஆன்மிகம் பேசினால் கைது செய்யும் தி.மு.க., அரசு
11 புரட்டாசி 2024 புதன் 03:08 | பார்வைகள் : 1367
தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் கைது செய்யும் தவறான செயலில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் முருகன் அளித்த பேட்டி:
கடந்த, 2ம் தேதி பிரதமர் மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். உலகிலேயே அதிகமான உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி பா.ஜ.. தான். அதற்கு பிறகுதான் சீனா உள்ளிட்ட மற்ற கட்சிகள் உள்ளன.
பா.ஜ.,வில், 10 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், நாடு முழுவதும், 11 கோடி உறுப்பினர்களையும், தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு பணிகள் நடந்து வருகிறது. தமிழக முதல்வர் ஏற்கனவே ஸ்பெயின், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றார்.
அதனுடைய முதலீடு என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர் கையெழுத்து இட்டதாக கூறும் நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் உள்ளன. இது ஒரு கண்துடைப்புக்கான பயணமாக உள்ளது. இதனால் தமிழகத்துக்கு எந்த முதலீடும் வரப்போவதில்லை.
'தமிழகத்தில் ஆன்மிகம் பேசினால் அவர்களை கைது செய்ய வேண்டும்,' என்ற தி.மு.க., அரசின் தவறான செயல் நடந்து வருகிறது. அவர் என்ன பேசினார் என்பதற்கு உள்ளே செல்ல நான் விரும்பவில்லை. எனினும், ஒரு நபர் பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக, கைது செய்யப்படுவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பா.ஜ., எந்த இடத்திலும் இந்தியை திணிப்பதில்லை. புதிய கல்வி கொள்கையானது ஆரம்ப கல்வியை தமிழ் உட்பட அந்தந்த மாநில தாய் மொழியில் கொண்டு வர வேண்டும் என்பது தான்.
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறி வருகிறோம். தேயிலை விலை நிர்ணயம் தொடர்பாக விவசாயிகள் உற்பத்தியாளர்களுடன் மத்திய வர்த்தக அமைச்சரை சந்தித்து அதற்கான தீர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு முருகன் கூறினார்.
முன்னதாக, குன்னுார் நகர பா.ஜ., செயலாளர் சரவண குமார் தலைமையில் காட்டேரி அருகே வரவேற்பு நிகழ்ச்சியில், டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்த அமைச்சர் முருகன், மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயலாளர் ஈஸ்வரன், உட்பட பலர் பங்கேற்றனர்.