உலகளாவிய பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலான தீர்வு தேவை
11 புரட்டாசி 2024 புதன் 03:10 | பார்வைகள் : 1171
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆராய்ச்சிப் பணிகளில் உள்ள தடைகளை கண்டறிந்து நீக்கி, உலகளாவிய பிரச்னைகளுக்கு உள்ளூர் அளவிலான தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நாடு முழுதும் உள்ள பல்கலைகள், கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்களில் ஆய்வுப்பணிகள் மற்றும் கண்டுபிடிப்பு கலாசாரத்தை வளர்ப்பதற்காக அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை மத்திய அரசு சமீபத்தில் நிறுவியது.
தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி, நாட்டின் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கான உயர்மட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான உச்ச அமைப்பாக இது செயல்படுகிறது.
தொழில்துறை, கல்வித்துறை மற்றும் அரசு துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை உருவாக்குகிறது. இந்த அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதல் நிர்வாகக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் பிரதமர் பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தின் வாயிலாக புதிய துவக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஆராய்ச்சி துறையில் உள்ள தடைகளை கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
பெரிய இலக்குகளை நிர்ணயித்தல், அவற்றை அடைவதில் கவனம் செலுத்துதல் மற்றும் புதிய ஆய்வுகளை மேற்கொள்வது குறித்தும் மோடி பேசினார். தற்போதுள்ள பிரச்னைகளுக்கு புதிய தீர்வுகளை காண ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தவும், உலகளாவிய பிரச்னைகளுக்கு இந்திய தேவைகளுக்கு ஏற்ப உள்ளூர் அளவிலான தீர்வுகளை காணவும் வலியுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.