செயற்கைகோள் வழி சுங்க கட்டண வசூல்; புதிய முறையை அறிவித்தது மத்திய அரசு
11 புரட்டாசி 2024 புதன் 03:11 | பார்வைகள் : 1369
சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையில், செயற்கைக்கோள் வாயிலாக பயண தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை சேர்த்துள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்கம், டெபிட், கிரெடிட் கார்டுகள் அடிப்படையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்ட போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், 'பாஸ்டேக்' வசதி அமலுக்கு வந்தது. அதன்பின் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும், சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுங்கச்சாவடியை கடக்க தாமதமாகிறது.
எனவே, சுங்கச்சாவடி கட்டண வசூலிப்பில், செயற்கைக்கோள் அடிப்படையிலான, 'குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்' எனப்படும், ஜி.என்.எஸ்.எஸ். முறை நடைமுறைக்கு வர இருப்பதாக, மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்காக, 2008ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வாகனங்களில், செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும், ஓ.பி.யு., கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும். இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்க கட்டண சாலைகளில் பயணிக்கும் போது, முதல் 20 கிலோ மீட்டருக்கு பிறகு, அந்த வாகனம் பயணிக்கும் துாரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, பாஸ்டேக் போலவே, வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
ஜி.என்.எஸ்.எஸ்., அடிப்படையிலான ஓ.பி.யு. கருவிகள், நாளடைவில் பெரும்பாலான வாகனங்களில் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, சுங்கச்சாவடிகள் படிப்படியாக அகற்றப்பட்டு விடும். அதுவரை பாஸ்ட்டேக் நடைமுறையுடன், ஜி.என்.எஸ்.எஸ். முறையிலும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, அதிவிரைவு சாலைகள், முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் இது அமலுக்கு வரவுள்ளது.
கருவி எங்கு கிடைக்கும்?
'ஆன்-போர்டு யூனிட்' என்ற சிறிய கருவியை, பாஸ்டேக் போலவே, அரசு இணையதளங்களில் வாங்கலாம்.
இனி, புதிதாக விற்பனைக்கு வரக்கூடிய வாகனங்களில் தயாரிப்பு நிறுவனங்களே பொருத்தி விற்பனை செய்யும்.
எப்படி செயல்படும்?
வாகனத்தின் வெளிப்பகுதியில் பொருத்தப்படவுள்ள ஓ.பி.யு. சாதனத்தின் வாயிலாக, ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் செயற்கைகோளுடன் இணைப்பு ஏற்பட்டு, வாகன பயண தூரம் பின்தொடரப்படும். குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படவுள்ள சி.சி.டி.வி., கேமராவின் பதிவுகளும் செயற்கைகோளுடன் ஒருங்கிணைக்கப்படும். பயண துார அடிப்படையில், சுங்கக் கட்டணம் கணக்கிடப்பட்டு, வங்கி கணக்கில் பிடித்தம் செய்யப்படும். இதனால், நெடுங்சாலைகளில் நாளடைவில் சுங்கச்சாவடிகளின் தேவை இல்லாமல் போய்விடும்.