அடுத்த டில்லி முதல்வர் யார்? போட்டியில் இரு பெண்கள்!
16 புரட்டாசி 2024 திங்கள் 06:20 | பார்வைகள் : 1776
டில்லியில் அடுத்த முதல்வர் பதவிக்கான போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுபான ஊழல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அக்னி பரீட்சையில் இறங்கி, மக்களின் தீர்ப்பை கேட்கப் போவதாகவும், சட்டசபைக்கு தேர்தலை முன்னதாக நடத்தும்படி கோர உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
2 நாட்களில் புதிய முதல்வர்
'அடுத்த இரண்டு நாட்களுக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்தி, ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். நான் நேர்மையானவன் என்பதற்கு மக்கள் ஒப்புதல் அளித்தால் தான், தேர்தலுக்குப் பின் முதல்வர் பதவியில் நானும், துணை முதல்வர் பதவியில் மணீஷ் சிசோடியாவும் அமர்வோம்' என கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இரு பெண்கள்
இதையடுத்து, அடுத்த முதல்வராக ஆம்ஆத்மியின் 2வது பெரிய தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பெயர் அடிப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட கெஜ்ரிவால் வழக்குகளை எதிர்கொள்பவர் பதவியை வகிக்க மாட்டார் என தெரிவித்தார்.
இந்த சூழலில், அடுத்த முதல்வர் போட்டியில் இரு பெண்கள் உள்ளனர். ஒருவர் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, மற்றொருவர் கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் அடுத்த டில்லி முதல்வர்?
முதல்வர் பதவிக்கான சாத்தியக்கூறுகளில், கல்வி, நிதி, பொதுப்பணித்துறை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷிக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கின்றனர் விவரம் தெரிந்த அரசியல் விமர்சகர்கள். அதேநேரத்தில், முதல்வரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பதவிக்கு மாற்றுவதற்கான சாத்தியமான வேட்பாளராக இருக்கலாம் என பேச்சு அடிப்படுகிறது.