திருமாவை சீண்டாதீங்க என தி.மு.க., வினருக்கு ஸ்டாலின்
16 புரட்டாசி 2024 திங்கள் 06:23 | பார்வைகள் : 1629
ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரும் வகையில் மது ஒழிப்பு மாநாடு அறிவித்து, அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்ததுடன், அடுத்த கட்டமாக, 'ஆட்சியில் பங்கு' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசி வருவது, தி.மு.க.,வினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. இருப்பினும், 'திருமாவளவனுக்கு எதிராக பேசி, அவரை சீண்டி விட வேண்டாம்' என, தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பூட்டு போட்டுள்ளார்; அத்துடன், 'கூட்டணியை தக்கவைக்க திருமாவுடன் பேச்சு நடத்துங்கள்' என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க.,வும் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார்.
இது, தி.மு.க.,வினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. இருப்பினும், தங்களின் கோபத்தை அவர்கள் வெளிக்காட்டவில்லை. முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றிருந்ததே அதற்கு காரணம்.
சமாளித்தார்
முதல்வர் தன் அமெரிக்க பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம், 'மது ஒழிப்பு மாநாட்டில், அ.தி.மு.க., பங்கேற்கலாம்' என, திருமாவளவன் அழைப்பு விடுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், 'திருமாவளவன் இதுபற்றி விளக்கமாக பதில் கூறியிருக்கிறார். அதற்கு மேல் விளக்கம் தேவையில்லை' என்று சமாளித்தார்.
இந்நிலையில், ஆட்சியில் பங்கு பற்றி, சமீபத்தில் திருமாவளவன் பேசியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த திருமா, 'ஆட்சியில் பங்கு என்பதை நீண்ட காலமாகவே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதையே இப்போதும் சொல்கிறோம்' என்றார்.
இந்தச் சூழலில், முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது வீட்டில் சந்தித்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், 'விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போக்கு, சமீப காலமாக தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் எதிராக உள்ளது.
'ஆட்சியில் பங்கு என திருமாவளவன் தற்போது பேசுவதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் துாண்டுதல் மற்றும் காய் நகர்த்தல்களே காரணம்' என்று புகார் கூறியுள்ளனர்.
அவர்கள் கூறியவற்றை எல்லாம், கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், 'தற்போது திருமாவளவனை சீண்ட வேண்டாம்; அமைதியாக இருங்கள்; கூட்டணியில் குழப்பம் வராமல், அவரை அழைத்து பேசுங்கள்' என, வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.
சிதைக்க முயன்றார்
இந்த விவகாரத்தில், முதல்வரிடம் தி.மு.க., மூத்த தலைவர்கள் கூறியது பற்றி, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
லோக்சபா தேர்தலின் போதே, தி.மு.க., கூட்டணியை சிதைக்க பழனிசாமி முயன்றார்; ஆனால், முடியவில்லை. தமிழக சட்டசபைக்கு ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரவுள்ள நிலையில், மீண்டும் தி.மு.க., கூட்டணியில் பிளவை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார்.
முதற்கட்டமாக திருமாவளவனை கையில் எடுத்திருக்கிறார். அவரும், பொதுநலன் தொடர்பான விஷயத்திற்காக போராடுவது போல, மது ஒழிப்பு பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.
மது ஒழிப்பு மாநாடு நடத்தினால், அது, தி.மு.க., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிந்தே, இந்த காரியத்தில் திருமா இறங்கி உள்ளார்.
மது ஒழிப்புக்கு எதிராக, தற்போது தி.மு.க.,வால் பேசவும் முடியாது; ஆதரிக்கவும் முடியாது. அப்படியொரு இக்கட்டை தி.மு.க.,வுக்கு ஏற்படுத்துவது தான், திருமாவளவன் மற்றும் பழனிசாமியின் திட்டம்.
இதுபோன்ற நிகழ்வுகள், ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் நிகழ்ந்தன. கூட்டணியில் இருந்தவர்கள், அ.தி.மு.க., அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான, சில காரியங்களை செய்தனர். குறிப்பாக, தே.மு.தி.க.,வின் விஜயகாந்த், அ.தி.மு.க., அரசுக்கு எதிராக சட்டசபையில் பேசினார்.
உடனே, சபையிலேயே அதற்கு ஜெ., பதிலடி கொடுத்தார். அதுமட்டுமின்றி, 'தே.மு.தி.க.,வை உடைத்து, விஜயகாந்துக்கு பலமாக இருப்போரை, அ.தி.மு.க., பக்கம் கொண்டு வாருங்கள்' என, கட்சியினருக்கும் உத்தரவிட்டார்.
அதிரடி நிலைப்பாடு
அதன் பிறகு தான், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.சுந்தர்ராஜன், தமிழழகன், நடிகர் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய ஏழு பேர், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து செயல்பட்டனர்.
அப்படியொரு அணுகுமுறையை, வி.சி.,க்கள் விஷயத்தில், தி.மு.க.,வும் பின்பற்ற வேண்டும். வி.சி., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலரை தி.மு.க., பக்கம் இழுக்க வேண்டும். அதன் வாயிலாக, திருமாவை மடக்கி விடலாம். அவர் அமைதியாகி விடுவார் என்று, முதல்வரை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூறினர்.
அவர்கள் சொல்லியதை பொறுமையாக கேட்ட ஸ்டாலின், 'நீங்கள் சொல்வது தற்போதைய சூழ்நிலைக்கும், தி.மு.க.,வுக்கு சரிவராது; அது ஏற்புடையதும் அல்ல. வி.சி., கட்சி நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு பேசுங்கள். அவர்கள் வாயிலாக, திருமாவை அழைத்து வாருங்கள். அவரிடம் பேசிக் கொள்ளலாம்' என்று, பதில் அளித்துள்ளார்.
வலுவிழக்கச் செய்யும் திட்டம்
'தி.மு.க., கூட்டணியை வலுவிழக்கச் செய்ய எதிர்க்கட்சியினர் திட்டமிடுகின்றனர். திருமாவுக்கு எதிராக சர்ச்சையாக பேசி, அவர்கள் விரித்திருக்கும் வலையில், தி.மு.க.,வினர் சிக்கி கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தை கவனமாக அணுக வேண்டும்' என்று கூறி, வாய்ப்பூட்டும் போட்டுள்ளார் ஸ்டாலின். இதன் பிறகே, அமைச்சர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் அமைதியாகினர்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
'நாங்கள் யாரையும் மிரட்டவில்லை'
திருச்சி விமான நிலையத்தில் நேற்று திருமாவளவன் அளித்த பேட்டி: வி.சி.,க்கள் நடத்தவிருக்கும் மது ஒழிப்பு மாநாடு, சமூக பொறுப்பை உணர்ந்து முன்னெடுக்கும் மாநாடு; தேர்தல் அரசியலுக்கானது அல்ல. கள்ளக்குறிச்சியிலும், மரக்காணத்திலும், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை சந்தித்த போது, அவர்கள் கண்ணீர் மல்க முன்வைத்த ஒருமித்த கோரிக்கை, 'டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்' என்பது தான். அதற்காக மாநாடு நடத்தினால் தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் என்று பிரச்னையை திசை திருப்புகின்றனர். ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, வி.சி., கட்சி தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து, கொள்கை முழக்கமாக இருந்து வருகிறது. இந்த முழக்கத்தில் மாற்றம் இல்லை. மது ஒழிப்பு மாநாடு வாயிலாக யாரையும் மிரட்டவில்லை. மத்தியில், 1977 முதல் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அதுபோல, மாநிலத்திலும் கோரிக்கை விடுப்பதில் தவறில்லை. அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் உண்மையான ஜனநாயகம். கூட்டணி ஆட்சி வந்தால் மட்டுமே, எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.