இலங்கையில் தேர்தல் நாளில் பொது போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படும் அபாயம்
17 புரட்டாசி 2024 செவ்வாய் 10:34 | பார்வைகள் : 1096
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் மேல் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நாளைய தினம் நடைபெறவுள்ள கடைசி பொதுக் கூட்டங்களுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் குழுக்கள் சுமார் 1500 பேருந்துகளுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி அதிக பேருந்துகளை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக நாடு முழுவதும் சுமார் 500 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் காரணமாக சுமார் 50 வீத பேருந்துகள் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேர்தல் நடைபெறும் 21ம் திகதி 10 முதல் 15 வீதம் வரையான பேருந்துகளே சேவையில் ஈடுபடும். அன்றைய தினம் நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.