சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோயினாக நடிக்க மறுத்த சைந்தவி!
22 புரட்டாசி 2024 ஞாயிறு 09:56 | பார்வைகள் : 1054
தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி பாடகியாக அறியப்படும் சைந்தவி, தன்னுடைய சிறு வயதில் இருந்தே முறையாக கர்நாடக சங்கீதம் பயின்று வந்த நிலையில், 12 வயதிலேயே மேடை கச்சேரிகளில் பாட தொடங்கினார். தனித்துவமான இவரின் குரல் வலத்தை கண்டு, ஆச்சர்யப்பட்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், 2004 ஆம் ஆண்டு, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'அந்நியன்' திரைப்படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டகாரி பாடலை பாடும் வாய்ப்பு கொடுத்தார். இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனதோடு, இந்த பாடலை பாடிய பாடகி யார் என்பதையும் பல ரசிகர்கள் தேட துவங்கினர். அந்த அளவுக்கு தனித்துவமானதாக பார்க்கப்பட்டது இவரது குரல்.
இந்த பாடலை தொடர்ந்து, மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 'தொட்டி ஜெயா' படத்தில் இடம்பெற்ற அச்சு வெல்லம் பாடலை சங்கர் மகாதேவன் மற்றும் ரஞ்சித்துடன் இணைந்து பாடியிருந்தார், இதையடுத்து, ஏபிசிடி, சரவணா, பட்டியல், ஆதி, வரலாறு, உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாடியுள்ளார் சைந்தவி. பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போதே பின்னணி பாடகியாக மாறிய சைந்தவிக்கு, காதல் வாழ்க்கையும் பள்ளி பருவத்திலேயே தொடங்கிவிட்டது
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான, ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே சுமார் 12 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன், 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக மிகவும் ஒற்றுமையான நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சைந்தவி - ஜிவி ஜோடி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். இருவருமே தங்களின் வளர்ச்சிக்காக ஒருமனதோடு இந்த முடிவை எடுப்பதாக அறிவித்தனர்.
ஜிவி-யுடனான விவாகரத்துக்கு பின்னர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ச ரி க ம ப சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் சைந்தவி. இந்நிலையில் இவரை பற்றி பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தை இயக்கி இருந்த இயக்குனர் வெங்கட் பிரபு, இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் இந்த தகவலை கூறியுள்ளார். ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோக்களின் ஃபிரென்ட் ரோலில் நடித்து வந்த வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான திரைப்படம், சென்னை 600028. இந்த திரைப்படத்தை எஸ்பிபி சரண் தயாரிக்க, ஜெய், சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் விஜயலட்சுமி கமிட் ஆவதற்கு முன்பு, இயக்குனர் வெங்கட் பிரபு ஹீரோயினாக நடிக்க வைக்க தேர்வு செய்தது சைந்தவியை தானாம். இது குறித்து சைந்தவியிடம் நேரடியாக சென்று தன்னுடைய படத்தில் ஹீரோயின் ஆக நடிக்கும்படி வெங்கட் பிரபு பலமுறை கேட்டும் கூட, தனக்கு நடிப்பு வரவே வராது என அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். இந்த தகவல் பல வருடங்கள் கழித்து இப்போது தான் வெளியே கூறியுள்ளார் வெங்கட் பிரபு. சென்னை 600028 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சிறந்த குடும்ப படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்றது. அதே போல் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.