Paristamil Navigation Paristamil advert login

வெற்றிடம் நிரப்புமா வெற்றிக்கழகம்?

வெற்றிடம் நிரப்புமா வெற்றிக்கழகம்?

27 ஐப்பசி 2024 ஞாயிறு 02:55 | பார்வைகள் : 3496


தமிழக அரசியலில் இருப்பதாக கருதப்படும் வெற்றிடத்தை, நிரப்புவதற்கான முதல் முயற்சியாக, தமது கட்சியின் மாநாட்டை விக்கிரவாண்டியில் இன்று (அக்.,27) பிரமாண்டமாக நடத்துகிறார் நடிகர் விஜய்.

தமிழக அரசியலில் நீண்ட காலம் கோலோச்சிய முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு, வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவே பலரும் கருதுகின்றனர். அதை வெளிப்படையாக கூறி, அதை நிரப்ப அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார் ரஜினி. ஆனால் உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவரால் கட்சி தொடங்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கி விட்டார் ரஜினி. அவர் சொன்ன வெற்றிடம் அப்படியே தான் இன்னும் இருக்கிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

அந்த இடத்தின் ஒரு பகுதியை, அண்ணாமலை வரவுக்குப் பிறகு பா.ஜ., நிரப்பி இருக்கிறது; சீமான் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி வருகிறார். அப்படியெனில் வெற்றிடம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் நாளுக்கு நாள் பலவீனம் அடையும் அ.தி.மு.க., தேர்தலுக்கு தேர்தல் சுருங்கிக் கொண்டே போகும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளால், வெற்றிடம் விரிவடைந்து கொண்டு வருவதாக நடிகர் விஜய் எண்ணுகிறார். அந்த இடத்தை, தான் இட்டு நிரப்புவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுதான் என்பது அவரது திட்டம்.

அந்த அடிப்படையில் தான் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கணக்கு போட்டு, கட்சியை இப்போது தொடங்கியுள்ளார். ஒரே தேர்தலில் மொத்த தமிழகத்தையும் வென்று ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பது விஜயின் கணக்கு.

தமிழகத்தில் இதுவரை எம்ஜிஆர் மட்டுமே செய்து காட்டிய அந்த சரித்திர சாதனையை தானும் படைக்க வேண்டும் என்பது அவரது இலக்கு. அதை நோக்கிய அவரது பயணம், விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாட்டுடன் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடம் தராமல் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விஜயின் கட்சி, தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வெற்றிகளை குவிக்குமா, அதற்கு இந்த மாநாடு உதவியாக இருக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்