Paristamil Navigation Paristamil advert login

கூட்டணி ஆட்சிக்கு தயார்! விக்கிரவாண்டி மாநாட்டில் அதிரடியாக அறிவித்தார் விஜய்

கூட்டணி ஆட்சிக்கு தயார்! விக்கிரவாண்டி மாநாட்டில் அதிரடியாக அறிவித்தார் விஜய்

27 ஐப்பசி 2024 ஞாயிறு 14:28 | பார்வைகள் : 847


தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தரப்படும் என்று நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் நடிகர் விஜய் தாம் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். கட்சியின் கொள்கை, செயல்திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், தொண்டர்கள் அளித்த பரிசு பொருட்களாக வெள்ளியால் ஆன வீரவாள், பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் உள்ளிட்டவற்றை நடிகர் விஜய் ஏற்றுக் கொண்டார். பின்னர், நேராக மேடையை விட்டு இறங்கிய அவர், தமது பெற்றோரான நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோரிடம் சென்று ஆசி பெற்றார்.


குழந்தையும்,பாம்பும்


பின்னர் மீண்டும் மேடையேறிய அவர், திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். நடிகர் விஜய் பேசியதாவது: முதல் முதலில் அம்மா முன்னாடி சிரித்தபடி நிற்கும் ஒரு குழந்தை எப்படி இருக்கும்? அப்படி ஒரு உணர்வுடன் தான் உங்கள் முன் நிற்கிறேன். அதே நேரத்தில் அம்மா முன் சிரிக்கும் குழந்தை முன்னால் பாம்பு நின்றால் என்ன ஆகும்? ஆனால் அந்த குழந்தையோ பாம்பை கண்டு சிரித்து கையில் எடுத்து விளையாடும். குழந்தைக்கு பாம்பை கண்டால் பயமில்லையா என்று எண்ண தோன்றும்.


அரசியல் முடிவு


இங்கு பாம்பு தான் அரசியல். அந்த பாம்பை கையில் பிடித்து விளையாடுவது தான் உங்கள் விஜய். அரசியலுக்கு நாம் குழந்தை தான். பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் கையில் எடுக்க முடிவு செய்தால் கவனமாக தான் களமாட வேண்டும். அந்த குழந்தை தான் நான், பாம்பு தான் அரசியல்.


என்ன பிரச்னை

இங்கே ஏற்கனவே இருக்கும் அரசியல்வாதிகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்கப் போவது இல்லை. அதற்காக அனைத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க போவதும் இல்லை. இப்போது என்ன தேவை, என்ன பிரச்னை, எப்படி அதை தீர்ப்பது என்று யோசித்து மக்களிடம் சொன்னால் போதும். இது நமது கடமை.ஈ.வெ.ரா., நமது கொள்கைத் தலைவரா என்று ஒரு கூட்டம் கிளம்பி வரும். அந்த பெயிண்ட் தடவும் கூட்டம் பற்றி பிறகு பேசுகிறேன்.

வழிகாட்டி

யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. பேரறிஞர் அண்ணாதுரை சொன்னது போன்று ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. ஈ.வெ.ரா.வுக்கு பின்னர் எங்கள் கொள்கை வழிகாட்டி தலைவர் காமராஜர். மதசார்பின்மையை ஆழமாக விதைத்தவர்.

அண்ணல் அம்பேத்கர் என்ற பெயரை கேட்டால் சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் நடுங்கி போவார்கள். வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் போன்ற பெண்களை கொள்கை வழிகாட்டி தலைவர்களை ஏற்று அரசியல் களத்தில் வரும் முதல் கட்சி த.வெ.க., தான்.


சமரசம் இல்லை

உங்கள் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள். எல்லோரும் நாம் என்ன செய்கிறோம் என்பதை சொல்ல வைக்க வேண்டும். கொள்கை கோட்பாட்டில் சமரசத்துக்கு என்றுமே இடமில்லை.

அரசியல் எதற்கு என்று நானும் நினைத்தேன். நம்மை வாழ வைத்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யாமல் இருப்பதுதான் விஸ்வாசமா என்ற கேள்வி எழுந்தது. இப்படி எழுந்த பல கேள்விகளுக்கு ஒட்டு மொத்தமான விடை எனது அரசியல் என்பதை கண்டுபிடித்தேன்.


யோசிக்கக்கூடாது


சில விஷயங்களின் பின் விளைவுகளை யோசிக்காமல் நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணி அரசியலில் தற்போது நுழைந்து விட்டோம். எதை பற்றியும் யோசிக்கக்கூடாது. அரசியலில் நாம் என்ன நிலைப்பாடு எடுக்கிறோம் என்பது ரொம்ப முக்கியம்.அதுவே நமது எதிரிகள் யார் என்று சொல்லும். எதிரிகள் இல்லாத வெற்றி இருக்கலாம். ஆனால் களம் அமைக்க முடியாது. அந்த களம் தான் அரசியல்.


கதறல்கள்


சமதர்ம சமத்துவ கொள்கையை கையில் எடுத்தபோதே இங்கே சில கதறல்கள் ஆரம்பித்துவிட்டன. இந்த கதறல்கள் மேலும் சத்தமாக கேட்கும் என்று பார்ப்போம். பிளவுவாத சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டுமே நமது எதிரியா? இல்லை ஊழலும் நமது எதிரி தான். ஊழல் இங்கு வைரஸ் மாதிரி அனைத்து இடத்திலும் இருக்கிறது. அதை ஒழித்துத்தான் ஆக வேண்டும். பிளவுவாத சக்திகள் யார் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ஏன் ஏன்றால் அது மதம் பிடித்த யானை மாதிரி. அதுவே அதனை நம்மிடம் காட்டி கொடுத்துவிடும்.


கொள்கை நாடகம்


ஆனால் ஊழல் என்பது எங்கே ஒளிந்திருக்கிறது, எப்படி ஒளிந்திருக்கிறது என்பதை கண்டு பிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் என முகமூடி போடும். கலாசார பாதுகாப்பு வேஷம் போடும். அதற்கு முகமே இல்லை, முகமூடி தான் முகமே.


இப்படி முகமூடி அணிந்த ஊழல் பேர்வழிகள் தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர். நமது மக்களுக்கு யார் இங்கு வர வேண்டும், வரக்கூடாது என்பது தெளிவாக தெரியும்.


அரசியல் பாதை

இங்கு சாதி என்பது சமூக நீதிக்கான அளவு கோலாகத்தான் இருக்கும். இது இந்த மண்ணில் நிரூபணமான ஒன்று. தமது முதல் எதிரி பிளவுவாத சக்திகள், மற்றொரு எதிரி ஊழல் கபடதாரிகள். மகத்தான அரசியல் என்றால் மக்களுக்கான அரசியல் என்பதுதான் எங்களின் நிரந்தர அரசியல் பாதை.

தேர்வு எழுதினால் ரிசல்ட் வருவது போன்று, மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தால் அது சரியாக போய் சேருகிறதா என்பதை பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். சோறு சாப்பிட்டால் தான் பசியாறும். சோறு என்று சொன்னால் பசியாறாது. மக்களுக்காக கொண்டு வரக்கூடிய திட்டங்கள் எல்லாம் நடைமுறையில் சாத்தியமாகும் திட்டங்களாக இருக்க வேண்டும்.

வாழ வைப்போம்


மீனை தராதே, மீன்பிடிக்க கற்றுக்கொடு என்று சிலர் சொல்வார்கள். நாங்கள் அப்படியானவர்கள் அல்ல, யதார்த்தமானவர்கள். முடிந்தவர்கள் மீன்பிடிக்க கற்றுக் கொண்டு வாழட்டும், முடியாதவர்களுக்கு நாங்கள் மீன்பிடித்து கொடுத்து வாழ வைப்போம். எங்கள் இலக்குகள் எங்கள் வழிகளை தீர்மானிக்கின்றன. அரசியல் தெளிவுகள் தான் எங்களின் நிர்வாக செயல்முறையாக இருக்கும். எங்களின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் யதார்த்தமாகவே இருக்கும். ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகள் போன்று மாற்று சக்திகள் என்று சொல்லிக் கொண்டு நாங்கள் இங்கு வரவில்லை.


ஏமாற்று வேலை


மாற்று அரசியல், மாற்று சக்தி என்று ஏமாற்றும் வேலைகளை செய்ய மாட்டோம். ஏமாற்று சக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றும் உங்கள் மகனாக, சகோதரனாக உழைக்க வேண்டும். ஒரு முடிவோடு தான் வந்துள்ளேன். அதுதான் எனது திட்டமும்கூட.


அரசியல் நேர்மை, ஒழுக்கத்துடன் தான் ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பேன். ஒரு முடிவுடன் தான் வந்துள்ளேன். இனி எதையும் திரும்பி பார்ப்பது இல்லை. இது நாம் அனைவரும் எடுத்த ஒட்டுமொத்த முடிவு. தயாராக இருக்கும் இந்த மாபெரும் சக்தி எடுத்த முடிவு.


பொய் பிரசாரம்


இந்த கூட்டம், கூட்டணி சேர்ந்து ஏமாற்றும் கூட்டம் அல்ல. சோசியல் மீடியாவில் கம்பு சுற்றும் கூட்டம் அல்ல. மண்ணை வாழ வைக்க போகும் கூட்டம். பணத்துக்காக கூடும் கூட்டம் அல்ல. அரசியலில் ஏ, பி டீம் என்று பொய் பிரசாரம் செய்து இந்த படையை வீழ்த்தலாம் என்று கனவில் கூட நினைத்துவிடாதீர்கள். 2026ல் தேர்தல் ஆணையம் போருக்கான நாள் குறிக்கும். 234 தொகுதிகளிலும் த.வெ.க.,வுக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் அணுகுண்டாக மாறும். அது நிச்சயம் நடக்கும்.


திராவிட மாடல் ஆட்சி


இங்கே ஒரு கூட்டம் ரொம்ப காலமாக ஒரே பாட்டை பாடிக் கொண்டு யார் அரசியலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட அரசியல் சாயத்தை பூசிக்கொண்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருக்கிறது. எப்போது பார்த்தாலும் பாசிசம் பேசுகிறது. அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தி விட்டு திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை ஏமாற்றுகின்றனர். எங்களுக்கு எங்களை தவிர வேறு யாரும் சாயம் பூச முடியாது. நாட்டையே பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் கொள்கை எதிரி.


முக்கிய பங்கு


திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் தான் என்பது எங்களின் தாழ்மையான கோரிக்கை. மதசார்பற்ற சமூகநீதி கொள்கையை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம். எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிப்பது பெண்கள் தான்.நம்மை பார்த்து யாரும், விசில் அடிச்சான் குஞ்சு என்று யாரும் அழைத்து விடக்கூடாது.


வேதனை


என் சொந்த தங்கையின் மரணம் அளித்த வேதனையை தந்தது தான் அனிதாவின் தற்கொலை. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. என்னை கூத்தாடி, கூத்தாடி என்று கூறுகின்றனர். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஆகியோரையே கூத்தாடி என்றுதான் அழைத்தனர். அந்த 2 பேரும் மறைந்தும் மக்கள் மனதில் இன்றும் நிற்கின்றனர். கூத்தாடி என்பது என்ன கெட்ட வார்த்தையா? கேவலமான வார்த்தையா? அன்று கூத்து இன்று அதுதான் சினிமா.


சினிமாவுக்கு வந்தபோது என்னை அசிங்கப்படுத்தினார்கள். கொஞ்சமும் கலங்காமல் காத்திருந்து உழைத்து மேலே வந்தவன் தான் இந்த கூத்தாடி. உழைப்பு மட்டும்தான் என்னுடையது. மற்றது எல்லாம் நீங்கள் தான்.


கைவிரல்களில் முடிவு

சாதாரண இளைஞன், நடிகன், பின்னர் வெற்றி நடிகர்,பொறுப்புள்ள குடும்பத்தலைவன், அரசியல்கட்சித் தொண்டன் என என்னை மாற்றியவர்கள் நீங்கள் தான். என் நிலை, எனது பொறுப்பை வடிவமைத்தவர்களும் நீங்கள்தான். எப்போதும் போல ஓய்வின்றி அலட்டிக் கொள்ளாமல் உழைப்பேன். அதன் முடிவு உங்கள் கைவிரல்களில் இருக்கும் போது எனக்கு என்ன கவலை.

நம்பிக்கை


உச்சத்தில் இருக்கும் எனது சினிமாவை, ஊதியத்தை விட்டு, உங்கள் விஜயாக வந்துள்ளேன். நம்பி நடப்போம், நம்பிக்கையோடு நடப்போம். தமிழக அரசியலின் புதிய திசையாக தமிழக வெற்றிக் கழகம் மாறி அத்தனை அழுக்குகளையும் நீக்கும். நம்பி வருபவர்களை அரவணைத்துத் தான் பழக்கம்.


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு தனித்துறை அமைக்கப்படும். அரசியலில் தனி பெரும்பான்மை கிடைத்தாலும், அரசியலில் நம்முடன் கலந்து வருபவர்களுக்கு அதிகாரத்தில், ஆட்சியில் பங்கு தரப்படும்.


இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்