விஜய் கட்சி மாநாடு குறித்து தலைவர்கள் கருத்து
28 ஐப்பசி 2024 திங்கள் 01:40 | பார்வைகள் : 645
தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா: விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை; குழப்பத்தில் இருக்கிறார்.
விஜய் தேசியவாதியா அல்லது பிரிவினைவாதியா என, தெளிவுப்படுத்த வேண்டும். விஜய் வருகையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; தி.மு.க.,வுக்கு தான் பாதிப்பு.
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: தி.மு.க., என்பது ஆலமரம். 'காய்த்த மரமே கல்லடி படும்' என்பது பழமொழி. அதனால், விஜய் பேச்சு குறித்து கவலைப்படவில்லை.
அவரின் பேச்சுக்கு, வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காங்கிரஸ் மற்றும் தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. அதில், எந்தவித இடப்பெயர்ச்சியும் ஏற்பட வாய்ப்பில்லை.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி: முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய்க்கு பாராட்டுக்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை விஜய் முன் வைத்து உள்ளார்.
புதிய தமிழகம் கட்சி துவங்கிய நாள் முதல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே, தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது.
அதுவே, தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு, ஆதரவான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க துவங்கி உள்ளன.
'எல்லாருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே, இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல்.
தமிழகம் அரசியல் களம், புதிய பாதையை நோக்கி பயணப்படும்.
துணை முதல்வர் உதயநிதி: மக்கள் யாரை ஏற்றுக் கொள்கின்றனர் என்பதும், கொள்கைகளும் முக்கியம். நீண்ட கால நண்பர் விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழக அரசியலில் 'கருப்பு, சிவப்பு' என்பதில் இருந்து தற்போது சிவப்பு, மஞ்சளாக மாறி வருகிறது. என் கட்சிக் கொடியில் புலி உள்ளது. விஜய் கட்சிக் கொடியில் யானை உள்ளது. விஜயை பார்க்க கூட்டம் கூடும்; அது ஓட்டுகளாக மாறாது என்பதை விட்டு விடுங்கள். அதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்:
தற்போதே, தி.மு.க., கூட்டணியில் உள்ள பல கட்சிகள் விஜய் கட்சிக்கு தாவ தயாராக உள்ளன. அக்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் தடுத்து நிறுத்தி பேச்சு நடத்துகிறார். நடிகர் விஜயால் அ.தி.மு.க.,வுக்கு பாதிப்பு இல்லை.