கூட்டணி ஆட்சி அறிவிப்பு; விஜய் ஏவிய பிரம்மாஸ்திரம்!
28 ஐப்பசி 2024 திங்கள் 01:42 | பார்வைகள் : 891
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவோம் என்ற த.வெ.க., நிறுவனர் விஜய்யின் பிரம்மாஸ்திரம் தமிழக அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வை உருவாக்கி இருக்கிறது.
சொன்னபடி கட்சி ஆரம்பித்தார், விழுப்புரத்தில் முதல் மாநாட்டை லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடத்தினார் நடிகர் விஜய். மாநாட்டில் பேசிய அவர், கட்சியின் கொள்கை, செயல்திட்டம், நோக்கம் என்ன என்பதை பற்றி தெளிவாக பேசிவிட்டார்.
ஒற்றை இலக்கு
அவரின் தீர்க்கமான பேச்சு, தொடக்கத்தில் நகைச்சுவை, போக போக ஆவேசம் என மாறி அரசியல் நெடி அடித்தது. அதிகாரத்தில் அமர்வது என்பதே ஒற்றை இலக்கு; ஆட்சியில், அதிகாரத்தில் தம்முடன் இணைவோருக்கு பங்கு என்றும் அறிவித்து தமிழக அரசியலில் அடுத்தக்கட்ட விவாதத்தை கிளப்பிவிட்டார் விஜய்.
வரவேற்பு
நடிகர் விஜய்யின் அறிவிப்பு , அழைப்புக்கு தமிழகத்தில் தற்போதுள்ள சில கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் ஆதவ் அர்ஜூனா, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோர் வரவேற்றுள்ளனர். கூட்டணி ஆட்சி தான் தேவை என்பதற்கான காலம் 2026 என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.
ஓட்டு வங்கி
கூட்டணி ஆட்சி என்பதை சிறிய கட்சிகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக பார்க்கலாம்.
அச்சாரம்
அதாவது கூட்டணி ஆட்சி, துணை முதல்வர் என்று முழங்கும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை குறி வைத்து அல்லது அக்கட்சிகளை தம்பால் ஈர்த்து, கூட்டணிக்கான அச்சாரத்தை தொடங்க எத்தனிக்கலாம். விஜய்யின் இந்த அழைப்பை அவர்கள் வரவேற்றுள்ளதே அதற்கான சமிக்ஞை என்பதை ஒதுக்கி விட முடியாது.
இன்னும் சொல்ல போனால், ஆளும் கட்சியுடன் தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தை இழந்து அடுத்த தேர்தலில் கூட்டணி அமைய வியூகம் வகுக்கும் கட்சிகளை குறி வைத்துத்தான் விஜய்யின் அழைப்பு இருக்கிறது.
இடைவெளி
இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறி இருப்பதாவது; மக்கள் இயக்கமாக இருந்து, அரசியல் கட்சியாக இப்போது மாறி இருக்கிறது த.வெ.க., இயக்கம், அமைப்பு என்பது வேறு. அரசியல் என்பது வேறு. இவை இரண்டுக்குமான அளவுகோல் அல்லது இடைவெளி என்பது சிறியது போன்று தோன்றினாலும் அதில் ஜெயிக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
மையப்புள்ளி
தமிழக அரசியல் களத்தில் கழக அரசியல் எதிர்ப்பு என்பதே அனைத்து புதிய மற்றும் இருக்கும் கட்சிகளின் மையப்புள்ளி. அதுவே கடந்த 50, 60 ஆண்டுகால அரசியலில் அனைவரும் அறிந்தது. இந்த நிமிடம் அரசியல் கட்சியாக எந்த ஒரு வெற்றியும் த.வெ.க., இன்னமும் பெறவில்லை.
அரசியல்
அரசியலில் கைக்குழந்தை தான் த.வெ.க. இப்படியான தருணத்தில் ஆளும் கட்சியை எதிர்த்தால் தான் அரசியலே செய்ய முடியும் என்பதை உணர்ந்து தான் விஜய் பேசியிருக்கிறார். ஆளும் கட்சியை விமர்சித்தால் அதிருப்தியில் உள்ள மக்களை தம் பக்கம் திருப்ப முடியும், அதே மனோநிலையில் இருக்கும் கட்சிகளையும் கூட்டணி வைத்து வளைக்க முடியும். எதிர்ப்பு அரசியல் யாரிடம் செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்து தான் தி.மு.க.,வை நேரடியாக தாக்கி இருக்கிறார்.
அஜெண்டா
சுயநல குடும்பம், திராவிட மாடல் அரசு என தி.மு.க., எதிர்ப்பு அரசியலே தமது கட்சிக்கான உத்வேக டானிக் என்பதை நடிகர் விஜய் தெளிவாக உணர்ந்திருக்கிறார். இன்று மட்டுமல்ல... 2026 தேர்தல் களம் வரை தி.மு.க., எதிர்ப்பு என்பது தான் அவரின் அஜெண்டாவாக இருக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அதனால் தான் 2026 தேர்தலில் தனிபெரும்பான்மை, கூட்டணி ஆட்சி க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார்.
இவ்வாறு அரசியல் விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர்.
எஜமானர்கள்
அரசியல் என்றாலே தெளிவான பார்வை நிரம்பவும் அவசியம். யாரை எதிர்த்தால் நம்மை மற்றவர்கள் கவனிப்பார்கள் என்பதை அட்சர சுத்தமாக அறிந்து வைத்துள்ளார் நடிகர் விஜய். இந்த நிமிடம் முதலே அவரின் எதிர்ப்பு அல்லது ஆக்கப்பூர்வ அரசியல் நடவடிக்கைகள் அவரது கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அந்த வகையில் கூட்டணி ஆட்சி என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ள விஜய், தமிழக அரசியலில் இதுவரை ஆட்சி அதிகாரத்தை ருசி பார்க்காத கட்சிகள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது ராஜதந்திரம், எந்தளவுக்கு அவருக்கும், கட்சிக்கும் பலன் தரும் என்பது கூடிய விரைவில் தெரியவரும்.