உள்நாட்டில் சி - 295 போர் விமானம் தயாரிப்பு; இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
29 ஐப்பசி 2024 செவ்வாய் 01:40 | பார்வைகள் : 582
குஜராத் டாடா ஆலையில் சி-295 போர் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பலம் சேர்க்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் சர்வதேச வான்வெளி போக்குவரத்து சந்தையில் இந்தியாவுக்கும் நிரந்தர இடம் கிடைக்கும்.
ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட என பல்வேறு பயன்பாடுகளை கொண்ட சி-295 விமானங்கள் முழுவதும் உள்நாட்டில் தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலை நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்டை( டிஏஎஸ்எல்) குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் மோடியும், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து, திறந்து வைத்தனர்.
ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை உள்நாட்டில் துவங்க உள்ளது.
'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டில் சி295 போர் விமானங்கள் தயாரிப்பதால் இந்தியா கிடைக்கும் நன்மைகள்
இந்திய பாதுகாப்பு அதிகரிப்பு
ஏர்பஸ் நிறுவனம் வடிவமைத்து தயாரிக்கும் இந்த விமானத்தால், படையினரை அழைத்து செல்லுதல், சரக்குகளை கையாளுதல், எரிபொருள் நிரப்புதல் பணிகள் எளிதாகும். கடலோர பாதுகாப்புக்கும் இவற்றை பயன்படுத்த முடியும்.
இந்த விமானமானது, தற்போது பயன்பாட்டில் உள்ள ரஷ்யாவின் அன்டோனோவ் ஏஎன்-32 மற்றும் எச்ஏஎல் நிறுவனத்தின் ஏவிரோ 748 விமானங்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும். இந்த விமானங்களை விட சி 295 விமானம் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டது.
இந்த விமானத்தை குறுகிய மற்றும் செப்பனிடப்படாத ஓடுதளங்களில் பயன்படுத்த முடியும். சீன எல்லையை ஒட்டிய பகுதிகள் மற்றும் சவாலான பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு இவை உகந்ததாக இருக்கும்.
மணிக்கு 482 கி.மீ., வேகத்தில் 8 டன் எடை அல்லது 71 வீரர்கள் அல்லது 48 பாராட்ரூப்பர்களுடன் இந்த விமானம் பறக்கும் திறன் கொண்டது.
மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கிடைக்கும் ஊக்கம்
பாதுகாப்பு துறையில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் கொண்டு வரப்பட்ட ' மேக் இன் இந்தியா' மற்றும் ' தன்னிறைவு பாரதம்' திட்டத்தின் முக்கியமானதாக சி-295 தயாரிப்பு மாறி உள்ளது.
சி-295 திட்டத்தின்படி இந்தியாவில் 56 விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், முதல் 16 விமானங்கள் ஏர் பஸ் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து பறக்கும் நிலையில் வழங்கும். எஞ்சிய 40 போர் விமானங்கள் வதோதராவில் உள்ள டாடா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும்.
இன்றைய நிலவரப்படி இந்தியாவிடம் 5 போர் விமானங்கள் வழங்கப்பட்டு உள்ளன. முதல் விமானம் 2023 செப்., மாதம் இந்தியாவிடம் வழங்கப்பட்டது.
தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் விமானங்களில் முதல்விமானம் 2026 செப்.,க்குள் தயாராகும். எஞ்சியவை 2031 ஆக., மாதத்திற்குள் நிறைவு பெறும்.
வேலைவாய்ப்பு
உள்நாட்டில் இந்த விமானங்கள் தயாரிக்கப்படுவதால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், பொருளாதாரத்திற்கு ஊக்கம் கிடைக்கும். நேரடியாக 3 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைக்கும்.
போர் விமானங்களுக்கு தேவைப்படும் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களும் வளர்ச்சி பெறும்.
இந்த விமானத்தின் உற்பத்தி மூலம் கிடைக்கும் வணிக மற்றும் நிதி ரீதியிலான பலன்கள் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க விளைவை தூண்டும்.
இந்தியாவின் வான்வெளி கட்டமைப்பு பலம் பெறுதல்
சி-295 போர் விமானம் திட்டத்தின்படி, பயிற்சி மையம் அமைத்தல் மற்றும் பராமரிப்பு மையம் அமைப்பதும் அடங்கும். இந்த விமானத்தை இந்திய விமானப்படை வீரர்கள் இயக்கவும், பராமரிக்கவும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
பராமரிப்பு மையம் அமைப்பதுடன், உதிரி பாகங்களுக்கு தேவையான கருவிகளையும் ஏர் பஸ் நிறுவனம் அடங்கும். உ.பி., மாநிலம் ஆக்ராவில் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
ஏற்றுமதிக்கு சாதகம்
சி295 திட்டமானது, இந்தியாவின் உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வது மட்டும் அல்லாது, எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
56 போர் விமானங்கள் தயாரித்து முடித்ததும், இந்தியாவிலேயே போர் விமானங்களை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு ஏர்பஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்யலாம். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் சர்வதேச வான்போக்குவரத்து சந்தையில் இந்தியாவுக்கு என ஒரு முக்கியமான இடத்தை உறுதி செய்யும் என பாதுகாப்பு படை நிபுணர்கள் கூறுகின்றனர்.