Paristamil Navigation Paristamil advert login

ஆக்கபூர்வ விமர்சனங்களை கருத்தில் கொள்வோம்; மற்றதை கடந்து செல்வோம்: விஜய்

ஆக்கபூர்வ விமர்சனங்களை கருத்தில் கொள்வோம்; மற்றதை கடந்து செல்வோம்: விஜய்

29 ஐப்பசி 2024 செவ்வாய் 13:33 | பார்வைகள் : 5845


மாநாட்டின் மூலம் வி. சாலை நமது வியூக சாலையாகவும், விவேக சாலையாகவும், வெற்றிச்சாலையாகவும் ஆனது என த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் கூறி உள்ளார்.

அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சாலையில் தாம் ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தி முடித்தார். மாநாட்டுக்கு வந்தவர்கள் 10 லட்சம் பேர், இல்லையில்லை அதற்கும் மேல் என்று தொண்டர்கள் இப்பவும் பூரிப்புடன் பெருமை பேசி வருகின்றனர்.

இந் நிலையில் எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலை கையில் எடுப்போம், 2026ல் நம் இலக்கை அடைவோம் என்று தொண்டர்களுக்கு அவர் 4 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது;

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது?

மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநாட்டில், நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி.

எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள். சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக் கொண்டு கலந்துகொண்டீர்கள்.

இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை. இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கழகத் தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை.

அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி, கண்கள் கலங்க நிற்கிறேன்.

எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது. உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன. தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை.

ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள். வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு, தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை, மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? இவை எல்லாவற்றையும், அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன்.

இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான், மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன். இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம்.

என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால் தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான, கண்ணியமான, ஆரோக்கியமான, உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர்.

நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் 'தீவிர அரசியல் செய்தலாக' இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர்.

ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன.

நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் விஜய் கூறி உள்ளார்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்