எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா முயற்சி: அமெரிக்கா வரவேற்பு
30 ஐப்பசி 2024 புதன் 03:12 | பார்வைகள் : 835
எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம்' என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் 2020 மே மாதம் நுழைய முயன்றது; இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதில் கால்வான் பகுதியில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் காரணமாக, இரு நாடுகளின் உறவு சீர்குலைந்தது.
இதனால் நான்கு ஆண்டுகளாக எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது. பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் தான் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி சில நாட்களாக இரு நாடுகளும் ராணுவத்தை வாபஸ் பெற்று வருகின்றனர். 2020ம் ஆண்டு மே மாதத்துக்கு முன் இருந்ததுபோல், எல்லையில் ரோந்துப் பணிகளில் இருநாட்டு ராணுவமும் மீண்டும் ஈடுபடும்.
படைகளை வாபஸ்
இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில், அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது: எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இரு நாடுகளும் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ராணுவ படைகளை வாபஸ் பெற்றதை நாங்கள் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.