2026 தேர்தலுக்கு தயாராக கட்சிப்பணி ஆய்வு! கோவையில் துவக்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
31 ஐப்பசி 2024 வியாழன் 02:36 | பார்வைகள் : 564
வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக, தமிழக முதல்வர் ஸ்டாலின், மாவட்டம் வாரியான கட்சி பணி ஆய்வை, கோவையில் வரும் நவ., 5ல் துவக்குகிறார். இதற்கான இடத்தை, கட்சியின் இணை அமைப்பு செயலர் அன்பகம் கலை மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், நவ., மாதம் முதல், மாவட்டம் வாரியாக ஆய்வு பணி மேற்கொள்வேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார். முதல் பயணமாக, கோவையில் நவ., 5 மற்றும், 6ம் தேதிகளில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். இடைப்பட்ட நேரத்தில், கட்சிப்பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாக, முதல்வர் கூறியிருந்தார்.
அதன்படி, கட்சி நிர்வாகிகளை சந்திக்க, குறிச்சி பிரிவில் இருந்து போத்தனுார் செல்லும் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் ஆய்வு கூட்டம் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இம்மண்டபத்தை, கட்சியின் இணை அமைப்பு செயலர் அன்பகம் கலை, பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர். நவ., 5ம் தேதி, கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், '2026 தேர்தலை சந்திக்க, கட்சியினரை தி.மு.க., தலைமை இப்பவே தயார் செய்ய துவங்கி விட்டது. பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் கவுன்சிலர்கள். அதனால், மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் தனியாக அழைத்து பேசுவதற்கு வாய்ப்புள்ளது' என்றனர்.