சுற்றுச்சூழல் மாசில்லாமல் தீபாவளி கொண்டாட்டம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு
31 ஐப்பசி 2024 வியாழன் 02:38 | பார்வைகள் : 788
சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கை: பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக சிறு குழந்தைகள், பெரியோர், நோய்வாய்பட்டுள்ளவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி, பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வரும் காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த நான்கு ஆண்டுகளாக, தீபாவளி பண்டிகையன்று காலை 6:00 முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 முதல் 8:00 மணி வரையில் மட்டுமே, ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொது மக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு நலச் சங்கங்கள் வாயிலாக முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை, அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.