Paristamil Navigation Paristamil advert login

சொல்வது எளிது: செய்வது கடினம்: காங்கிரசை சாடுகிறார் பிரதமர் மோடி

சொல்வது எளிது: செய்வது கடினம்: காங்கிரசை சாடுகிறார் பிரதமர் மோடி

2 கார்த்திகை 2024 சனி 03:41 | பார்வைகள் : 799


உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை முறையாக நிறைவேற்றுவது என்பது கடினம் அல்லது சாத்தியம் இல்லாதது என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது'', என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிப்படி , 'சக்தி' திட்டத்தை முதலில் முதல்வர் சித்தராமையா செயல்படுத்தினார். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக கர்நாடகா முழுதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதனால், குஷியடைந்த பெண்கள், குடும்பத்துடன் சுற்றுலா, தீர்த்த யாத்திரை செல்கின்றனர். திட்டங்கள் வெற்றி அடைந்தாலும், கட்சியில் அபஸ்வரங்களும் எழுந்தன.

இதனிடையே, அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் சிவகுமார், 'டிக்கெட் எடுக்க எங்களுக்கு பொருளாதார வசதி உள்ளது. இலவச டிக்கெட் வேண்டாம்' என சில மாணவியர் இ - மெயில் மற்றும் 'எக்ஸ்' வலைதளம் வழியாக கருத்து தெரிவிக்கின்றனர். எனவே சக்தி திட்டத்தை மறு பரிசீலனை செய்வது குறித்து, முதல்வருடன் ஆலோசிக்கப்படும்' என்றார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குறுதி அளிப்பதற்கு முன்னர் நன்கு பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில காங்கிரசாருக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டித்தார்.

இந்நிலையில், 'எக்ஸ்' சமூக வலைதளம் வாயிலாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை முறையாக நிறைவேற்றுவது என்பது கடினம் அல்லது சாத்தியம் இல்லாதது என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. ஒவ்வொரு பிரசாரத்தின் போதும், அவர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால், அது நிறைவேற்ற முடியாதது என்பதை அறிவார்கள். தற்போது மக்கள் முன் மோசமான முறையில் அக்கட்சியினர் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா என காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வளர்ச்சிப்பாதை மற்றும் நிதி நிலைமை மோசமான நிலையில் உள்ளது. தங்களின் உத்தரவாதம் என காங்கிரசார் கூறும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கிடக்கின்றன. இத்தகைய அரசியலால் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வாக்குறுதிகளின் பலன்கள் மறுக்கப்படுவது மட்டும் அல்லாமல், தற்போதுள்ள திட்டங்களையும் நீர்த்துப்போகச்செய்வதையும் மக்கள் பார்க்கிறார்கள்.

கர்நாடகாவில் காங்கிரஸ் உட்கட்சி பூசலில் ஈடுபடுவதுடன், மாநிலத்தின் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல் கொள்ளையடிப்பதில் மும்முரமாக உள்ளது. தற்போது திட்டங்களை திரும்ப பெறுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில், அரசு ஊழியர்களின் சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. தெலுங்கானாவில் , அக்கட்சி அளித்த வாக்குறுதிப்படி கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இதற்கு முன்பும், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் அளித்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சி செய்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்று காங்கிரசின் பணிக்கு ஏராளமான சான்று உள்ளன.

பொய் வாக்குறுதி அளிக்கும் காங்கிரசின் கலாசாரம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சமீபத்தில் அக்கட்சியின் பொய் வாக்குறுதியை நிராகரித்த ஹரியானா மக்கள், வளர்ச்சி சார்ந்த நிலையான அரசை ஏற்படுத்தியதை பார்த்தோம்.

காங்கிரசுக்கான ஓட்டு என்பது மோசமான நிர்வாகம், மோசமான பொருளாதாரத்திற்கான ஓட்டு என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர். இந்திய மக்கள் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புகின்றனர். இவ்வாறு அந்த பதிவுகளில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்