இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள்: வெளியானது பட்டியல்!
5 கார்த்திகை 2024 செவ்வாய் 03:04 | பார்வைகள் : 180
இந்தியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி உள்ளார். எட்டாவது இடத்தை ஸ்டாலின் பிடித்துள்ளார்.
இந்தியா டுடே இதழ் நாடு முழுவதும் தலைவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் செல்வாக்கு மிகுந்த தலைவர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3வது தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் என்ற பெருமை பெற்றார் மோடி. லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத போதிலும் சமீபத்தில் நடந்த ஹரியானா சட்டசபை தேர்தலில் பிரதமரின் செல்வாக்கு நிரூபணம் ஆகி உள்ளது. அவரது ஆட்சி காலத்தில் தான், உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து உள்ளது. அமெரிக்காவுடன் நட்புறவை வலுப்படுத்திய நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் ஒரே நேரத்தில் பேசும் வெகு சிலரில் பிரதமரும் ஒருவர்.
மோகன் பகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டாவது இடத்தில் உள்ளார்.ஆர்எஸ்எஸ் அமைப்பு பா.ஜ.,வின் உள் கட்டமைப்பிற்குள் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அரசியல் நியமனங்கள், வேட்பாளர்கள் குறித்து இந்த அமைப்பின் கருத்து முக்கியமானதாக உள்ளது. சமீபத்தில் ஹரியானாவில் பா.ஜ., பெற்ற வெற்றிக்கு இந்த அமைப்பு பங்கு மிக அதிகம். புதிய பா.ஜ., தலைவரை தேர்வு செய்வதில் இவரின் ஒப்புதல் மிக முக்கியமானதாக உள்ளது.
அமித்ஷா
மூன்றாவது இடத்தில் இருப்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, ஹரியானா சட்டசபை தேர்தலில் இவரின் செல்வாக்கு மீண்டும் வெளிப்பட்டு உள்ளது. அத்வானி மற்றும் ஜி.பி.பண்ட் ஆகியோருக்கு பிறகு நீண்ட நாட்கள் உள்துறை அமைச்சராக உள்ளார். உள்நாட்டு பாதுகாப்பை உயர்ந்தஇடத்தில் வைத்துள்ளார்.
இந்தியாவின் நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்தும் நபர்களில் முக்கியமானவர். இவர் பல்வேறு அரசு குழுக்களிலும் உள்ளார். இவரின் கருத்தைகேட்ட பிறகே பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ராகுல்
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நான்காவது இடத்தில் உள்ளார். இவரின் கடின உழைப்பால் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது. ஹரியானா தேர்தல் முடிவுகள், அவர் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளதை காட்டினாலும், முக்கியமான தேசிய கட்சியில் முடிவு எடுப்பவராக உள்ளார். மத்திய அரசை கொள்கைகளை பின்வாங்க செய்யும் அளவிற்கு இவரின் கருத்துகள் அமைந்துள்ளது.
சந்திரபாபு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஐந்தாவது இடத்தில் உள்ளார். அரசியல் இருட்டடிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். இவரின் 16 எம்.பி.,க்களின் ஆதரவுடனேயே மத்திய பா.ஜ., அரசு உள்ளது. இது தே.ஜ., கூட்டணியில் அவருக்கான செல்வாக்கை எடுத்து காட்டுகிறது.
நிதீஷ்குமார்
ஆறாவது இடத்தில் இருப்பவர் பீஹார் முதல்வர் நிதீஷ்குமார். தே.ஜ., கூட்டணியில் 12 எம்.பி.,க்கள் அவரது கட்சிக்கு உள்ளனர். கூட்டணியின் முக்கிய தலைவராக இவரை தே.ஜ.,வினர் முன்னிறுத்துகின்றனர். தே.ஜ., கூட்டணியின் ஸ்திரத்தன்மைக்கு இவரின் ஆதரவு முக்கியமானது. ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை நாடு முழுதும் எழுவதற்கு இவர் ஒரு காரணகர்த்தா.
யோகி ஆதித்யநாத்
ஏழாவது இடத்தில் உள்ளார் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத். உ.பி.,யின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. 7.7 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள இவர் அசைக்க முடியாதவராக உள்ளார். புல்டோசர் அரசியலை முன்னெடுத்தவர். 2027 ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2029 லோக்சபா தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறார்.
ஸ்டாலின்
எட்டாவது இடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். தி.மு.க.,வுக்கு லோக்சபாவில 22 மற்றும் ராஜ்யசபாவில் 10 எம்.பி.,க்கள் உள்ளனர். தமிழகத்தில் இவரின் செல்வாக்கு காரணமாக 39 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது. 2021 ல் ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இலக்கு நிர்ணயித்தார். 9.74 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளார்.
மம்தா பானர்ஜி
ஒன்பதாவது இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜ.,வை கடுமையாக எதிர்த்தார். மோடி அரசுடனான மோதலை எதிர்க்கட்சி முகாமிற்கும் எடுத்து செல்லும் இவர், பார்லிமென்டில் குறைந்த பலம் இருந்தாலும் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துவதில் மும்முரமாக உள்ளார்.
அகிலேஷ் யாதவ்
10வது இடத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளார். தேசிய அளவில் பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு அடுத்து 37 எம்.பி.,க்களை வைத்துள்ள கட்சியின் தலைவர் இவர் ஆவார். உ.பி.,யின் அயோத்தியில் இவரது கட்சி பெற்ற வெற்றி மூலம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார். இவரின் தேர்தல் வியூகம் காரணமாக அம்மாநிலத்தில் பா.ஜ.,வின் பலம் குறைந்தது.