இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
5 கார்த்திகை 2024 செவ்வாய் 16:37 | பார்வைகள் : 150
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (05) மாலை 4.00 மணி முதல் நாளை (06) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, ருவான்வெல்ல, வரகாபொல, தெரணியகல, அரநாயக்க, கலிகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் "அவதானமாக இருக்கவும்" என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் "விழிப்புடன் இருக்கவும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று (05) இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை (06) மாலை அல்லது இரவில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.