மீண்டும் தி.மு.க., ஆட்சிதான்; முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!
6 கார்த்திகை 2024 புதன் 02:57 | பார்வைகள் : 719
2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெறும், என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இரண்டு நாள் பயணமாக கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விளாங்குறிச்சியில், எல்காட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
சுகுணா கல்யாண மண்டபத்தில் நில எடுப்பு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து,கோவை தெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தயாரிக்கும் பொற்கொல்லர்களின் பட்டறையில் கொல்லர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் விடுதியினை முதல்வர் ஆய்வு நடத்தினார். போத்தனூரில் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இது முடிந்ததும் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:மக்கள் பல கோரிக்கைகள் வைத்திருக்கின்றனர். அவை நிறைவேற்றித் தரப்படும். கோவை மக்கள் வரவேற்பு சிறப்பாக இருந்தது. 2026 இல் திமுக தான் ஆட்சி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது. தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு, கட்சி ரீதியாக மாவட்டம் விரிவுபடுத்த திட்டம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினர். அதற்கு, கட்சி முடிவு பண்ணக்கூடிய விஷயங்களை உங்களிடம் சொல்ல முடியாது எனக்கூறினார்.