கமலா ஹாரிஸ் வெற்றி பெறணும்; பூர்வீக கிராமம் துளசேந்திரபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை!
6 கார்த்திகை 2024 புதன் 03:06 | பார்வைகள் : 991
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, அவரது பூர்வீக ஊரான மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸின் பூர்விகம், திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமம். இவரது தாய் வழித்தாத்தா பி.வி.கோபாலன். சிவில் சர்வீஸ் அதிகாரி. இவரின் இரண்டாவது மகளான சியாமளா உயர்கல்விக்காக 1960களில் அமெரிக்கா வந்தார். அங்கு, ஜமைக்காவைச் சேர்ந்த டொனால்ட் ஹாரிசை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1964 ல் மகளாக பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸ் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டார். தொடர்ந்து கலிபோர்னியாவின் முதல் பெண் எம்.பி., ஆகவும் தேர்வானார். 2019 ல் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறங்கிய போது துணை அதிபராக கமலா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராம மக்கள் விரும்புகின்றனர்.
இதற்காக, கமலா ஹாரிஸ் குல தெய்வமான தர்மசாஸ்தா கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதற்காக, அமெரிக்காவில் இருந்து கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர் சிறப்பு பிரார்தனையில் பங்கேற்றனர். மேலும், அவர் வெற்றி பெற வேண்டி, கோயில் வளாகத்தில் பேனர் ஒன்றையும் கிராம மக்கள் வைத்து உள்ளனர்.
இந்த கோயிலுக்கு நன்கொடை கொடுத்ததாக கல்வெட்டில் கமலா ஹாரிசின் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது.