சுவிஸ் உணவகங்கள் தொடர்பில் அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
7 கார்த்திகை 2024 வியாழன் 11:04 | பார்வைகள் : 1311
சுவிஸ் மாகாணமொன்றிலுள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்திலுள்ள பேசல் மாகாணத்திலுள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் சில பொருட்கள் உணவில் இருந்த நிலையில், அது குறித்த விவரங்கள் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
குறிப்பாக, கபாப் வகை உணவுகளை அதிகாரிகள் ஆர்டர் செய்தபோது, சில கபாப்களில் பால் பொருட்கள் இருந்தன. பால் பொருட்கள் ஒவ்வாமை உடையோர் பலர் இருக்கிறார்கள்.
அதுபோல, மாட்டிறைச்சி கபாபில் பன்றி இறைச்சியும், கோழிக்கறியும் இருந்துள்ளன. ஒவ்வாமை ஏற்படுத்தும் பல உணவு உட்பொருட்களும் அவற்றில் இருந்துள்ளன.
ஆகவே, ஒவ்வாமை பிரச்சினை உடையவர்கள் இத்தகைய உணவுப்பொருட்களை ஆர்டர் செய்யும்போது கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அத்துடன், சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், உணவகங்கள் முன்னேற்றம் காட்டியுள்ளனவா என மீண்டும் ஒரு முறை சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.