கனடாவில் TikTok செயல்பாடுகள் முடிவுக்கு கொண்டு வர உத்தரவு
7 கார்த்திகை 2024 வியாழன் 14:49 | பார்வைகள் : 1102
கனடாவில் "தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" காரணமாக டிக்டாக் (TikTok) நிறுவனத்தின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருமாறு கனேடிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், டிக்டாக் தனது வர்த்தக நடவடிக்கைகளை நாட்டில் நிறுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இருப்பினும், ஆபத்தைத் தடுக்க டிக்டாக் செயலியை அரசாங்கம் முழுமையாகத் தடை செய்யவில்லை.
இதுகுறித்து கனடாவின் புதுமை, அறிவியல் மற்றும் தொழில் அமைச்சரான பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் கூறுகையில், டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆபத்துகளுக்கான தகவல்கள், உளவுத்துறையின் ஆய்வுகள் மற்றும் பிற அரசாங்க ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார்.
இந்த முடிவு அமெரிக்காவின் டிக்டாக்கிற்கு எதிரான முடிவுகளைப் போன்றே முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், டிக்டாக் கனடாவின் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.