Le Petit Prince : உலகசாதனை படைத்த பிரெஞ்சு சிறுகதை..!
11 கார்த்திகை 2024 திங்கள் 08:58 | பார்வைகள் : 1586
"Le Petit Prince" எனும் உலகப்புகழ்பெற்ற பிரெஞ்சு சிறுகதை - தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
இந்த சிறுகதை 2024 ஆம் ஆண்டில் "dulegaya" எனும் மத்திய அமெரிக்காவில் பேசப்படும் ஒரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது இந்த சிறுகதை மொழிபெயர்க்கப்படும் 600 ஆவது மொழியாகும். மதங்கள் சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து, இதுவரை எந்த ஒரு புத்தகமும் செய்யாத சாதனை இதுவாகும். இதுவரை எந்த ஒரு சிறுகதையும் இத்தனை மொழிபெயர்ப்புகளை கண்டதில்லை.
Dulegaya மொழியானது Kuna இன மக்களால் பேசப்படும் ஒரு அழிந்துவரும் மொழியாகும். பனாமா, கொலம்பியா போன்ற நாடுகளில் வசிக்கும் 70,000 இற்கும் குறைவானவர்கள் பேசும் மொழியாகும். இந்த மொழியைக் காப்பாற்றவும், அதனை தலைமுறை தாண்டி கடத்தவும் இந்த சிறுகதையின் மொழிபெயர்ப்பு உதவுவதாக இந்த நூலினை வெளியிடும் பதிப்பகத்தினர் தெரிவித்தனர்.
எழுத்தாளர் d'Antoine de Saint-Exupéry எழுதிய இந்த சிறுகதை தமிழில் யூமா வாசுகி எனும் எழுத்தாளரினால் 'குட்டி இளவரசன்' எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.