இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
11 கார்த்திகை 2024 திங்கள் 10:36 | பார்வைகள் : 496
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி பார்படாஸில் நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது.
35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை மேற்கிந்திய தீவுகள் பறிகொடுத்த நிலையில், அணித்தலைவர் ரோவ்மன் பாவெல் நிதானமாக ஆடினார்.
மறுமுனையில் ஷெப்பர்ட் அதிரடி காட்ட, மேற்கிந்திய தீவுகள் 158 ஓட்டங்கள் எடுத்தது. பாவெல் 41 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தார். மஹ்மூத், லிவிங்ஸ்டன் மற்றும் மௌஸ்லே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். எனினும், வில் ஜேக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் (Jos Buttler) கூட்டணி மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
குறிப்பாக சிக்ஸர் மழை பொழிந்த பட்லர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். வில் ஜேக்ஸ் 38 (29) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பட்லர் 45 பந்துகளில் 83 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் லிவிங்ஸ்டன் 11 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 14.5 ஓவரிலேயே 161 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.