பிரித்தானியாவில் பனிப் புயல் தாக்கும் அபாயம்
12 கார்த்திகை 2024 செவ்வாய் 11:11 | பார்வைகள் : 519
பிரித்தானியாவில் எதிர் வரும் நாட்களில் கடுமையான குளிரான காலநிலை நிலவும் என புதிய வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்காண்டினேவியாவிலிருந்து 700 மைல் பரப்பளவில் பனிப்புயல் பிரித்தானியாவை தாக்கக் கூடும் என WXCharts வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.
நவம்பர் 18-ஆம் திகதி முதல் -5°C வரை குறைந்த வெப்பநிலைகளுடன், நாட்டில் குளிரான காலநிலை தொடங்க வாய்ப்பு உள்ளது.
ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில் ஆழமான நீல மற்றும் ஊதா நிறங்கள் வரைபடத்தில் தெரிகின்றன.
இதன் மூலம், அந்த பகுதிகளில் கடுமையான பனி மற்றும் குறைந்த வெப்பநிலைகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TheWeatherOutlook வழங்கிய மற்றொரு தகவலின்படி, நவம்பர் 24-ஆம் திகதிக்குள் சில பகுதிகளில் 25 செ.மீ. வரை பனி பொழியலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால், Met Office அளித்த முன்னறிவிப்பில், பனி தாக்கத்திற்கும் புயல் தாக்கத்திற்கும் சில வாய்ப்புகள் இருப்பினும், அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் கணிப்பின் படி, அடுத்த வார இறுதியில் நாடு முழுவதும் மழை மற்றும் தூறல் பொழியும் வாய்ப்பு அதிகம்.
"வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தெற்கு பிராந்தியங்களில் வறண்ட மற்றும் பிரகாசமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது. சில இடங்களில் குளிர்கால மழை பெய்யக்கூடும், வடக்கில் உயரமான நிலத்தில் பனி விழ வாய்ப்புள்ளது.
Met Office நவம்பர் மாதத்தின் பிற்பகுதியிலும், குறிப்பாக டிசம்பர் மாத தொடக்கத்தில் (நவம்பர் 26 முதல் டிசம்பர் 10 வரை) அதிகமான மழை மற்றும் காற்று வீசும் வாய்ப்பு அதிகம் என கணிக்கின்றது.