இஸ்ரேலுக்கு சவுதி இளவரசர் கடும் எச்சரிக்கை விடுப்பு
12 கார்த்திகை 2024 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 1483
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் காஸா முனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றறை ஆண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 44,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ரியாத்தில் நடந்த உச்சி மாநாட்டில், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.
அரபு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அவர், காஸா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையானது இனப்படுகொலை என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், "பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக செயல்பட விடாத வரை இஸ்ரேலை ஒருபோதும் சவுதி அரேபியா அங்கீகரிக்காது. உடனே இப்போரை நிறுத்த வேண்டும்" என்றார்.
அதேபோல் லெபனானுக்கு ஆதரவாக பேசிய இளவரசர், "லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலையும் கண்டிக்கிறோம். இதுதவிர இஸ்ரேல் ஈரானை குறிவைக்கிறது.
இதை தடுத்து, ஈரானின் இறையாண்மையை நிலைநாட்ட சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும். பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் உள்ள நமது சகோதரர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளை தடுக்க, சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.