சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு கிடையாது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
13 கார்த்திகை 2024 புதன் 03:02 | பார்வைகள் : 570
நாட்டில் பா.ஜ., இருக்கும் வரை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு கிடைக்காது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
எச்சரிக்கை
இன்று, 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், மீதமுள்ள 38 தொகுதிகளில், வரும் 20ல் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், ஜார்க்கண்டின் பலமு மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
இட ஒதுக்கீடு பற்றி காங்., பேசுகிறது. அரசியலமைப்பில், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த பிரிவும் இல்லை. எந்தவொரு மதத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது.
மஹாராஷ்டிராவில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, காங்., தலைவர்களிடம் உலமாக்கள் குழு கோரிக்கை மனு அளித்தனர். இதை பெற்ற காங்., தலைவர் ஒருவர், இதற்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு குறைக்கப்படும். இந்த விவகாரத்தில், ஜார்க்கண்ட் மண்ணில் இருந்தே ராகுலை எச்சரிக்கிறேன்.
அவர் மனதில் என்ன சதி திட்டம் இருந்தாலும் சரி, பா.ஜ., இருக்கும் வரை, இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது.
ஊழல்
காங்., எப்போதுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராகவே செயல்படுகிறது.
அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ராஜிவ், இந்திரா ஆகியோர் எதிர்த்தனர். மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க காங்., பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.
ஆனால், 2014ல் மத்தியில், பா.ஜ., அரசு அமைந்ததும், பிரதமர் மோடி அதை உடனே செயல்படுத்தினார்.
ஜார்க்கண்டில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி அரசு, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. இதை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி, அனைவருக்குமான அரசை வழங்க பா.ஜ., தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.