Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., எதிர்ப்பு சக்திகள்? அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் பேச வாசன் திட்டம்

தி.மு.க., எதிர்ப்பு சக்திகள்? அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் பேச வாசன் திட்டம்

13 கார்த்திகை 2024 புதன் 03:06 | பார்வைகள் : 565


தி.மு.க., எதிர்ப்பு சக்திகளை ஒரு குடையின்கீழ் கொண்டுவர விரும்பும் த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., அனுமதி பெற்று, அ.தி.மு.க., - த.வெ.க., - பா.ம.க., - தே.மு.தி.க., தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலின்போதே, அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., கூட்டணி உருவாக, வாசன் முயற்சி மேற்கொண்டார். இதற்காக டில்லி சென்றவர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

சாதகமான சூழல்


அதன் தொடர்ச்சியாக, சென்னையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, மூன்று முறை பேச்சு நடத்தினார். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதை பழனிசாமி விரும்பாததால், அப்போது வாசன் முயற்சி தோல்வியடைந்தது. வாசன் ஆலோசனையை பழனிசாமி கேட்காமல் தவிர்த்ததால், அவருக்கு மட்டுமல்ல, மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் நஷ்டம் என்பதை, அ.தி.மு.க., தலைவர்களும், பிற கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் தோல்விக்குப் பின் உணர்ந்தனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டியில் த.வெ.க., நடத்திய பிரமாண்ட மாநாட்டுக்குப் பின், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணம், தி.மு.க.,வை தவிர, மற்ற கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தி.மு.க., எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைத்து, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக வலுவான 'மெகா' கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்க, வாசன் திட்டமிட்டுள்ளார். லோக்சபா தேர்தல்போல, இம்முறை தோற்று விடக்கூடாது என்பதிலும், அவர் உறுதியாக உள்ளார்.

த.மா.கா., நிர்வாகிகள் கூறியதாவது: டில்லி சென்றுள்ள வாசன், பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா போன்ற பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களை சந்திக்க, நேரம் கேட்டுள்ளார்.

பலமான கூட்டணி


அவர்களை சந்தித்து, சட்டசபை தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து பேசுகிறார். லண்டனில் இருந்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திரும்பியபின், அவரை சந்தித்து, தன் திட்டம் குறித்து பேச உள்ளார். பா.ஜ., ஒப்புதலுடன், தமிழகத்தில் உள்ள தி.மு.க., எதிர்ப்பு கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

பா.ஜ., - அ.தி.மு.க., - த.வெ.க., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் ஓரணியில் வந்தால், மிகப்பெரிய பலம் கிடைக்கும் என்றும், வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றும் கணக்கு போட்டுதான் வாசன் களத்தில் இறங்குகிறார். ஆனால், அவருடைய திட்டமும், முயற்சியும் பலிக்குமா என தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்