காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ரூ.50 கோடி: சித்தராமையா
14 கார்த்திகை 2024 வியாழன் 03:31 | பார்வைகள் : 476
காங்., எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா ரூ.50 கோடி தருவதாக, பா. ஜ., பேரம் பேசி உள்ளது' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடகா, மைசூரு மாவட்டத்தில், ரூ.470 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: எங்கள் அரசை எப்படியாவது கவிழ்க்க, 50 எம்.எல்.ஏ.க்களுக்கு 50 கோடி ரூபாய் வழங்குவதாக அவர்கள் (பா.ஜ.,) கூறியுள்ளனர். அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம்? முன்னாள் முதல்வர்கள் பி.எஸ்.எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, பா.ஜ.க., மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா பணத்தை அச்சடிக்கிறார்களா?
பொய் பிரசாரம்
அதெல்லாம் லஞ்சப் பணம். அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். கடந்த முறை, அந்த பணத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும், 50 கோடி ரூபாய் வழங்கினர். ஆனால் இந்த முறை அதற்கு எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் சம்மதிக்கவில்லை. அதனால்தான் எப்படியாவது இந்த அரசை அகற்ற வேண்டும் என்று பொய் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அதனால் என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்கின்றனர். இவ்வாறு சித்தராமையா கூறினார்.