Paristamil Navigation Paristamil advert login

நுண்ணுயிர் அழிவு அனைத்து உயிர்களுக்குமான எச்சரிக்கை; சத்குரு பேச்சு

நுண்ணுயிர் அழிவு அனைத்து உயிர்களுக்குமான எச்சரிக்கை;  சத்குரு பேச்சு

14 கார்த்திகை 2024 வியாழன் 03:32 | பார்வைகள் : 232


ஐ.நா.,வின், 29வது பருவநிலை உச்சி மாநாட்டில், 'நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.

ஐ.நா., சபை சார்பில், சி.ஓ.பி., 29 எனப்படும் பருவநிலை உச்சி மாநாடு, அசர்பைஜான் நாட்டில், கடந்த 11ம் தேதி துவங்கியது. இதில் உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாட்டில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மண்வளம் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசியதாவது:

நாம் சூழலியல், காலநிலை ஆகியவற்றை பற்றி பேசும்போது, இது மனித உயிர், வாழ்வாதாரம் மற்றும் மனிதர்களின் வாழ்க்கை முறை பற்றியது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.

இந்த பூமியின் ஆரோக்கியம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களும் உயிர்ப்போடு இருப்பதில் இருக்கிறது. நுண்ணுயிர், பூச்சி, புழு மற்ற அனைத்து சிறிய உயிர்களும் வலிமையாக வாழவில்லை என்றால், நாம் வலிமையாக வாழ முடியாது.

நீண்ட காலமாக நிலம், பசுமை போர்வையின்றி தரிசாக விடப்படுவதால், அதிகமான உயிரினங்கள், குறிப்பாக நுண்ணுயிர்கள் அழிந்து போகின்றன. இந்தப் போக்கு, பூமியை அழித்துவிடும். உயிரினங்கள் என்று சொன்னால் நாம் பாண்டா, புலி மற்றும் டைனோசர்கள் பற்றி நினைக்கிறோம். ஆனால், அப்படி இல்லை.

நம் அனைவருக்கும் அடித்தளமாக இருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் அழிந்து வருகின்றன. இது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களுக்குமான மரண எச்சரிக்கை.

மண் அழிவு என்பது மிகத் தீவிரமான பிரச்னை. ஆனால், இதை பற்றி யாரும் பேசுவதில்லை. தற்போது, இந்த மாநாட்டில் நாம் பசுமையான உலகத்தைப் பற்றி பேசுகிறோம். மேலும், விவசாய நிலங்கள் ஒன்று மரங்கள், புதர்கள், மூடு பயிர்கள் என, ஏதோ ஒரு வகையில் பசுமை போர்வையின் கீழ் வரவேண்டும்.

நானும், நீங்களும், கச்சா எண்ணெய் நல்லதல்ல என்று சொல்வதால் மட்டுமே, இந்த உலகம் எண்ணெய் பயன்பாட்டை கைவிட்டு விடாது. சரியான மாற்று வழிகள் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்