ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லை 9 ஆக குறைப்பு
14 கார்த்திகை 2024 வியாழன் 05:36 | பார்வைகள் : 1379
ஈராக்கில் பெண்களுக்கு திருமணம் வயயதெல்லை தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.
மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர்.
முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது.
கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த நிலையில், ஈராக்கில் பெண்ணின் திருமண வயதை 18 இல் இருந்து 9 ஆகக் குறைக்க சட்ட திருத்தம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஷியா பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிப்பதால் இந்த சட்ட திருத்தம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது எனவும் கூறப்படுகிறது.
எனினும் இதற்கு அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.
இந்த சட்டவரைபு நிறைவேற்றப்பட்டால் இளம் பெண்கள் மீதான பாலியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் அதிகரிக்கும் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கல்வி நடவடிக்கையை இடைநடுவில் நிறுத்த வேண்டிய நிலைமை பெண்களுக்கு ஏற்படும் என்றும் பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான எதிர்ப்புக்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பெண்ணின் திருமண வயதில் திருத்தங்கள் செய்துள்ள இந்த சட்டவரைபை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈராக் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.