சிக்ஸர் மழையில் முதல் சதம் அடித்த இந்தியர்! போட்டியாக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீரர்
14 கார்த்திகை 2024 வியாழன் 08:57 | பார்வைகள் : 420
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
செஞ்சூரியனில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
சஞ்சு சாம்சன் டக்அவுட் ஆன நிலையில், சிக்ஸர்களை பறக்கவிட்ட அபிஷேக் ஷர்மா அரைசதம் விளாசினார். அவர் 25 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, திலக் வர்மா (Tilak Varma) ருத்ர தாண்டவம் ஆடினார்.
மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் (1), ஹர்திக் பாண்டியா (18), ரிங்கு சிங் (8) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர்.
எனினும் திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் முதல் டி20 சதம் விளாசினார். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் இந்திய அணி 219 ஓட்டங்கள் எடுத்தது. சிமெலனே, மஹராஜ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரிக்கெல்ட்டன் 20 ஓட்டங்களும், ஹென்றிக்ஸ் 21 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
ஸ்டப்ஸை 12 ஓட்டங்களில் அக்சர் படேல் ஆட்டமிழக்க செய்தார். அடுத்து மார்க்கரம் 29 (18) ஓட்டங்கள் வருண் ஓவரில் அவுட் ஆனார்.
எனினும் ஹெயின்ரிச் கிளாசென் மற்றும் மார்கோ யென்சென் அதிரடியில் மிரட்டினர். கிளாசென் 22 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 41 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் எடுத்ததால், இந்தியா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கோ யென்சென் (Marco Jansen) 17 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அவர் இந்திய அணிக்கு எதிராக அதிவேகமாக டி20 அரைசதம் (16 பந்துகளில்) அடித்த வீரர் எனும் சாதனையை படைத்தார்.
அதேபோல் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் யென்சென் படைத்தார். டி காக் 15 பந்துகளில் இந்த சாதனையை செய்திருந்தார்.
திலக் வர்மா டி20 சதம் அடித்த இரண்டாவது இளம் இந்திய வீரர் (22 வயது) என்ற சாதனையை படைத்தார்.