இலங்கை பொதுத் தேர்தல் - வாக்கு பதிவான வீதம் வெளியானது
14 கார்த்திகை 2024 வியாழன் 15:19 | பார்வைகள் : 717
பத்தாவது நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை நேரடியாகவும் 29 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்வதற்காக இன்று வியாழக்கிழமை அமைதியான மற்றும் சுமூகமான முறையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 65 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
என்றாலும், இத்தேர்தலில் வாக்காளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை போன்று வாக்களிப்பில் பெரிதும் ஆர்வம் காட்டாததால் மந்தமான தேர்தலாகவே இடம்பெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 75.89 வீதமான வாக்குப் பதிவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 79.46 வீதமான வாக்குப் பதிவும் இடம்பெற்றிருந்த போதிலும் இம்முறை அண்ணளவாக 65 வீதமான வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்தது.
2023ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெற்ற இத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 71இலட்சத்து 40ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 160 தொகுதிகளில் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு நடைபெற்றது.
இம்முறை வாக்களிப்பு மிகவும் மந்தமான முறையில் இடம்பெற்றதுடன், மக்கள் வாக்களிப்பில் பெரிதும் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. அதன் காரணமாக 65 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரவல் அமைப்பு தெரிவித்தது.
ஆனால், இலங்கை வரலாற்றில் பாரதூரமான அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக இது அமைந்துள்ளதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் இதுவும் இம்முறை பதிவாகியிருக்கவில்லை என்றும் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இம்முறை தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 8888 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 5,006 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
பிற்பகல் 2 மணிவரை 50 வீதமான வாக்குகளே பதிவாகியிருந்தன. பிற்பகல் 2 மணியின் பின்னர் மக்கள் ஓரளவு வாக்களிப்பில் ஆர்வம் காட்டியிருந்த போதிலும் மாலை 4 மணிக்கு வாக்களிப்புகள் நிறைவடையும் போது ஒரு சில மாவட்டங்களை தவிர மற்றைய மாவட்டங்களில் 65 வீதத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
மலையகத்தில் சில பிரதேசத்திலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வாக்களிப்பில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டியிருக்கவில்லை.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் அவதானிப்பின்படியும் மற்றும் தேர்தல் கண்கானிப்பு அமைப்புகளின் அவதானத்தின்படியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ள வாக்குப் பதிவு வீதங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு,
கொழும்பு மாவட்டம்
கொழும்பு மாவட்டத்தில் 18 உறுப்பினர்களை தெரிவு செய்யவதற்காக 15 தொகுதிகளில் 1,744,208 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டத்தில் 19 உறுப்பினர்களை தெரிவு செய்யவதற்காக 13 தொகுதிகளில் 1,846,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
களுத்துறை மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 8 தொகுதிகளில் 1,004,120 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 66 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 13 தொகுதிகளில் 1,173,303 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 67 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 தொகுதிகளில் 423,936 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டம்
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 தொகுதிகளில் 595,395 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 68 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
காலி மாவட்டம்
காலி மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 10 தொகுதிகளில் 890,589
பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
மாத்தறை மாவட்டம்
மாத்தறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களைதெரிவு செய்வதற்காக 674,914 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டம்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 தொகுதிகளில் 512,721 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 60 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 11 தொகுதிகளில் 583,752 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 69 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
வன்னி மாவட்டம்
வன்னி மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 300,675 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 தொகுதிகளில் 438,264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 61 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டம்
திகாமடுல்ல மாவட்டத்தில் 7 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 4 தொகுதிகளில் 541,875 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 62 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் 4 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 தொகுதிகளில் 307,304 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 67 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
குருநாகல் மாவட்டம்
குருநாகல் மாவட்டத்தில் 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 14 தொகுதிகளில் 1,396,290 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
புத்தளம் மாவட்டம்
புத்தளம் மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 651,933 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 56 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டம்
அனுராதபுரம் மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 7 தொகுதிகளில் 727,665 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
பொலனறுவை மாவட்டம்
பொலனறுவை மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 தொகுதிகளில் 345,771 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
பதுளை மாவட்டம்
பதுளை மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 9 தொகுதிகளில் 693,360 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 66 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
மொனராகலை மாவட்டம்
மொனராகலை மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3 தொகுதிகளில் 391,714 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 61 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
இரத்தினப்புரி மாவட்டம்
இரத்தினப்புரி மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 8 தொகுதிகளில் 910,140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 65 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
கேகாலை மாவட்டம்
கேகாலை மாவட்டத்தில் 9 உறுப்பினர்களைதெரிவு செய்வதற்காக 9 தொகுதிகளில் 699,849 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன் அவர்களில் 64 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் வாக்களிப்புகள் முடிவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக 50ஆயிரத்துக்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவுக்குள் அனைத்து தேர்தல் மாவட்டங்ளின் முடிவுகளும் வெளியாகும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.