சேவை ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரிப்பு;ரிசர்வ் வங்கி கவர்னர் மகிழ்ச்சி!
15 கார்த்திகை 2024 வெள்ளி 03:05 | பார்வைகள் : 148
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில், சேவை ஏற்றுமதி 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளிக்க பேருதவியாக இருக்கிறது' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறினார்.
உலகளாவிய தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசிய சக்திகாந்த தாஸ் பேசியதாவது:
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பண வீக்கமும், பொருளாதார தேக்க நிலையும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உலகளாவிய அளவில் நீடிக்கிறது.
உக்ரைன் போர் காரணமாக, பொருள் வினியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள், அதன் தொடர்ச்சியான பணவீக்கம் ஆகியவற்றால், உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், கடுமையான பொருளாதார பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான 'சாப்ட் லேண்டிங்' நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறையானது, ஜி.டி.பி.,யில் 1.1 சதவீதம் என்ற நிர்வகித்து விடக்கூடிய நிலையில் இருக்கிறது. 2024- 25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், வெளிநாடுகளுக்கான வர்த்தக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சேவை ஏற்றுமதி முதல் அரையாண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
சேவை ஏற்றுமதியும், வெளிநாட்டு வாழ் இந்தியர் அனுப்பும் பணமும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை சமாளித்து விடும்.வெளிநாட்டு முதலீடு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை காட்டிலும் அதிகமாக உள்ளது; அந்நியச் செலாவணி கையிருப்பு உயரவும் வழிவகுக்கிறது.
இந்தியா தற்போது உலகில் அதிகப்படியாக அந்நியச் செலாவணியை கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகளில் நான்காம் இடத்தில் உள்ளது. அதாவது, 682 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கைவசம் உள்ளன.
இதைக்கொண்டு, நாட்டின் ஒட்டு மொத்த வெளிநாட்டுக் கடனையும், ஓராண்டுக்கான ஒட்டு மொத்த இறக்குமதி செலவையும் சமாளித்து விட முடியும்.இவ்வாறு சக்திகாந்த தாஸ் பேசினார்.