பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பு அதிகரிப்பால் மக்காச்சோளம் பயிரிட அதிகரிக்க வாய்ப்பு
16 கார்த்திகை 2024 சனி 07:06 | பார்வைகள் : 165
வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் உற்பத்தியில் எத்தனால் திரவத்தின் பங்கு அதிகரிப்பதால் எத்தனால் தயாரிக்க பயன்படும் மக்காச்சோளம் அதிக பரப்பளவில் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது' என, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த வேளாண் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில், குறிப்பாக துாத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம், புதுார், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய வட்டங்களில் அதிகளவில் மானாவாரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இங்கு விவசாயிகள் உற்பத்திப்பொருட்களை, நேரடியாக சந்தை மேற்கொள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஒன்றிணைத்து, அவர்களின் விவசாயத்திற்கு தேவையான விதை முதல் விற்பனை வரை அனைத்து தேவைகளையும் எளிதில் மேற்கொள்ளவும், அவர்களுக்கு தேவையான பயிற்சி, இடுபொருட்கள், வங்கிக் கடன், சந்தையாக்கம் போன்றவற்றை மேற்கொள்ளவும், ஏ.பி.சி., செய்நிலம் அக்ரி பிசினஸ் கல்ச்சர் நிறுவனம், ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்கிறது.
கோவில்பட்டி சில்வர் ஸ்டோன் பார்க் ரிசார்ட் அரங்கில், நேற்று இந்நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கில், பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
செய்நிலம் அக்ரி பிசினஸ் கல்ச்சர் ஏ.பி.சி., நிறுவன மண்டல மேலாளர் செல்வகணபதி வரவேற்றார். நிறுவனர் ஜெகநாதன் ஒருங்கிணைத்தார். நபார்டு வங்கி அதிகாரிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள், வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர்.
எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனத்தின் இணை இயக்குனர் ஸ்ரீனிவாசன் ராமசுப்பு பேசியதாவது:
எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவனம் ஒரு நாளில், 2 லட்சம் லிட்டர் உற்பத்தி செய்கிறது. நிறுவனத்தில் ஒரு ஆண்டுக்கு, 6 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்க முடியும்.
தமிழகத்தின் எத்தனால் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய, இன்னும், 20 எத்தனால் நிறுவனங்கள் தேவையாக உள்ளன. தற்போதைக்கு ஓரிரு எத்தனால் நிறுவனங்களே உருவாகியுள்ளன. மொத்தத்தில், 7 முதல் 8 நிறுவனங்கள் தான் ஆயத்தமாகி வருகின்றன.
ஒரு நாளில் ஒரு நிறுவனம், 2 லட்சம் லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய, 500 டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 15,000 டன்னும், ஒரு ஆண்டுக்கு, 1.80 லட்சம் டன் மக்காச்சோளமும் தேவைப்படுகிறது.
தற்போது மத்திய அரசு, 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்திய அளவில் சராசரியாக, 13 சதவீதம் மட்டுமே எத்தனால் கலக்கப்படுகிறது.
வரும் ஆண்டுகளில் டீசல் உற்பத்தியிலும் எத்தனால் கலக்க இருப்பதால் மக்காச்சோளத்தின் தேவை அபரிமிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்காச்சோள உற்பத்தி நிலப்பரப்பளவை பன்மடங்கு அதிகரித்தால், வருங்கால தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
பீஹார், ஜார்க்கண்ட் போன்ற வட மாநிலங்களில் மக்காச்சோளம் ஒரு ஏக்கரில், 3 முதல் 3.5 டன் உற்பத்தி செய்கின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒரு ஏக்கரில் 1.5 டன் முதல் 2 டன் வரை தான் உற்பத்தி செய்கிறோம்.
எனவே உற்பத்தியை அதிகரித்தால், அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும். எனவே மக்காச்சோள உற்பத்தி பரப்பளவு அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீனிவாசன் ராமசுப்பு பேசினார்.
நபார்டு வங்கி அதிகாரிகள் சசிகுமார், சுரேஷ் ராமலிங்கம் ஆகியோர் விவசாயிகளின் உற்பத்திக்கு தேவையான கடனுதவியை செய்ய நபார்டு வங்கி தயாராக இருப்பதாகவும், தற்போதும் பலருக்கும் அவர்களின் துவக்க பயிற்சி முதல் உற்பத்தி சந்தைப்படுத்துதல் வரை நபார்டு வங்கி உதவி வருவதாகவும் பேசினர்.
திருநெல்வேலி ஒழுங்குமுறை விற்பனைக் கூட மார்க்கெட் கமிட்டி செயலர் பி.என்.எழில் ஆன்டனி, துாத்துக்குடி அதிகாரி கே.முருகப்பன் பேசுகையில், 'ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அனைத்து மாவட்டங்களிலும் வட்டங்கள் தோறும் செயல்படுகின்றன.
'எங்களது கிடங்குகளில் உழவர்களின் உற்பத்திப் பொருளை சேமிக்கலாம். உலர் மையங்களை இலவசமாக பயன்படுத்தலாம். கிடங்கில் சரக்கு இருப்பு வைக்கும் காலத்தில் பொருளின் மதிப்பில், 75 சதவீதம் பொருளீட்டு கடன் வழங்குகிறோம்' என்றனர்.
வேளாண் இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து பொருட்கள் பயன்படுத்துவது குறித்து டாக்டர் சி.எஸ்.கீர்த்திவாசன் பேசுகையில், ''பழைய பூச்சிக்கொல்லி மருந்துக்கு பதிலாக நவீன இயற்கை சார்ந்த மருத்துவ முறைகள் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
விளாத்திகுளம் புதுார் பயிர் உற்பத்தியாளர் கம்பெனி, வான்மழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், மானாவாரி உழவர் உற்பத்தியாளர் மையம், பசுவை உற்பத்தியாளர் மையம், கயத்தாறு கோவில்பட்டி ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், துாத்துக்குடி பயிர் உற்பத்தியாளர் நிறுவனம், புதுார் குருநாதர் நிறுவனம், துாத்துக்குடி விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், சங்கை கோமதி உற்பத்தியாளர் நிறுவனம் உள்ளிட்ட 11 நிறுவனங்களின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
செய்நிலம் அக்ரி பிசினஸ் கல்ச்சர் நிறுவனர் ஜெகநாதன் பேசுகையில், ''உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் வரும் ஆண்டுகளில் ஒரு நிறுவனம், 5 லட்சம் ரூபாய் முதல் பல கோடி வரை உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த முடியும். விவசாயிகள் உற்பத்தி பொருளை சந்தைப்படுத்த இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்.
''இதற்காக 11 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் ஏ.பி.சி., நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. மக்காச்சோளம் மட்டுமின்றி, உற்பத்தியாகும் மிளகாய், பருத்தி, எள் போன்றவற்றையும் சிறப்பான சந்தைப்படுத்தல் மேற்கொள்ள உள்ளோம்.
''தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் உழவர்களை ஒன்றிணைத்து சந்தைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
எஸ்.எல்.பி., எத்தனால் நிறுவன அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், கோலப்பன் பங்கேற்றனர்.
தேனி ஒருங்கிணைந்த ஆடு வளர்ப்போர் நிறுவனத்தின் சார்பில், ஆடு வளர்த்தல் தொழிலில் உள்ள லாபம் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து இயக்குனர்கள் காமராஜ், காசிராஜ் விளக்கினர்.