ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து வீரர் டிம் சவுதி! கனவு நிறைவேறியதாக உருக்கம்!
16 கார்த்திகை 2024 சனி 09:47 | பார்வைகள் : 128
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சவுதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான வரும் டெஸ்ட் தொடருடன் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக டிம் சவுதி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில், நியூசிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் 300, 200, 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
2008 இல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது பயணத்தை தொடங்கிய சவுதி, பின்னர் நியூசிலாந்து அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உருப்பெற்றார்.
நான்கு ஒருநாள் உலகக் கோப்பை, ஏழு டி20 உலகக் கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என பல்வேறு முக்கிய போட்டிகளில் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
சமூக வலைதள பக்கத்தில் சவுதி வெளியிட்ட பதிவில், நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது தனது கனவாக இருந்ததாகவும், அது நிறைவேறியதற்கு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.