தனுஷ் குறித்து நயன்தாராவின் அறிக்கை..!
16 கார்த்திகை 2024 சனி 13:24 | பார்வைகள் : 156
உங்களுடைய கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனுஷ் அவர்களே, பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காக வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
திரு கஸ்தூரி ராஜாவின் ஆதரவை பெற்றும், உங்கள் அண்ணன் திரு K.செல்வராகவனின் இயக்கத்தின் கீழ் சினிமாவில் நடித்து, முன்னணி நடிகரான நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பின்னணியும் இல்லாத பெண்ணாக, சவாலான சினிமா உலகில் போராடி, நேர்மையான உழைப்பின் மூலம் இன்றைய இடத்தை அடைந்தேன். என் பயணத்தைப் புரிந்து, என்னைப் பெருமிதத்துடன் பார்க்கும் ரசிகர்களும், திரைத்துறையினர் நன்றாகவே அதை அறிந்துள்ளனர்.
நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் பாடல்களும், அவற்றின் உணர்ச்சி நிறைந்த வரிகள் இன்றும் மக்களால் கொண்டாடப்படுகின்றன. அவற்றை எனது திருமண ஆவணப்படத்தில் கூட பயன்படுத்தக் கூடாது என சொல்லப்படுவதால் நான் எந்த அளவுக்கு வருத்தம் ஏற்படும் என உங்களுக்குத் தெரிந்திருக்கும். எந்தவொரு சட்டமுறை காரணத்தாலோ அல்லது வணிக ரீதியிலான காரணத்தாலோ தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டிருந்தால் அதை பொருத்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட வேறுபாடுகள் காரணமாகவே அதை ஒதுக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
சமீபத்தில் வெளியான டிரைலரில் உள்ள 3 விநாடி காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், ஏற்கனவே இணையத்தில் பகிரப்பட்ட ஒரு தனிப்பட்ட காட்சிக்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பது மிகவும் எதிர்பாராததாகவும் உள்ளது. இத்தகைய செயல்கள் உங்கள் உண்மையான முகத்தை வெளிக்காட்டுகின்றன. மேடைகளில் பேசுவது போல், நீங்கள் வாழ்க்கையில் கூட அதுபோல நடந்து கொள்ள முடியாது என்பதையும் நாங்கள் நன்றாக அறிவோம்.
என் சினிமா பயணத்தின் இனிய நினைவுகளைச் சொல்லும் பல காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்கு அனுமதி கேட்டபோது பல தயாரிப்பாளர்கள் பேரன்புடன் ஒப்புதல் அளித்தனர். அவர்கள் உங்களைப் போல இல்லாமல், மனிதத் தன்மையுடன் நடந்து கொண்டனர். அதனால் அவர்கள்தான் காலத்தை கடந்து வாழ்ந்து வருகிறார்கள்.
உங்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட ரீதியாக போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கான நகல் உரிமை காரணங்களை நீதிமன்றத்தில் விளக்குங்கள். ஆனால் கடவுளின் முன்பில் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.
நானும் ரௌடிதான்' வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், உங்கள் அவமானகரமான செயல்களை மறைக்கும் போலி முகமூடி அணிந்து நீங்கள் சுற்றித் திரிய முடியும். ஆனால், தயாரிப்பாளராக எனக்கு பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்கள் இன்று வரை கொண்டாடும் அந்த படத்துக்கு எதிராக நீங்கள் கூறிய கடுமையான வார்த்தைகளை மறக்க முடியாதது. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய காயம் என்றென்றும் ஆறாது. அந்த படத்தின் வெற்றியால் உங்களுக்கு ஏற்படுத்திய உளவியல் பாதிப்பை சினிமா நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
பின்னர், சினிமா விழாக்களில் (Filmfare 2016) நீங்கள் காட்டிய அதிருப்தி, எந்த சாதாரண பார்வையாளருக்கு தெளிவாக புரிந்தது. எந்தத் துறையிலும் வணிக ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை என்பது உண்மை. ஆனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது. அநாகரிகமான செயல்கள், யாராக இருந்தாலும், அதுவும் உங்களை போன்ற பிரபலமான நடிகர் என்றாலும் கூட, தமிழ்நாட்டு மக்கள் அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
கடந்த காலத்தில் உங்களோடு பயணித்தவர்கள் வெற்றி பெற்றால், அதனை எந்த கோபமும் இல்லாமல், அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தக் கடிதத்தின் மூலம் வேண்டிக்கொள்கிறேன். இந்த உலகம் எல்லோருக்கும் சமமாகவே இருக்கிறது. கடின உழைப்பின், கடவுளின் அருளின், மக்களின் பேரன்பின் காரணமாக, சினிமாவில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் வெற்றி பெற்றாலும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், அது உங்களை பாதிக்கக்கூடாது. அடுத்த இசை வெளியீட்டு விழாவில் இதுபோன்ற விஷயங்கள் நிகழவில்லை என நீங்கள் கூறி, சில கதைகளை கற்பனையாக உருவாக்கலாம். ஆனால், அவற்றை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த நேரத்தில், ஜெர்மன் மொழியின் “Schadenfreude” என்ற வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதன் அர்த்தத்தை புரிந்து, இனி யாருக்கும் அதனைச் செய்யாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
"மகிழ்வித்து மகிழ்" என்பதே உண்மையான சந்தோஷம். வாழ்க்கை கொண்டாட்டங்களால் நிறைந்திருக்க வேண்டும், அனைவரும் புன்னகையோடு அதை கடக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள். இதை மையமாக வைத்துத்தான் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஒருமுறை பார்த்தால், உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக மாறுவது நிச்சயம்.
நீங்கள் எல்லா இடங்களிலும் கூறும் "Spread Love" என்பதைக் கொண்டாடுவதை வெறும் வார்த்தைகளாக மட்டுமல்லாமல், ஒரு முறையாவது வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்று இனி நானும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்," என அவர் தெரிவித்துள்ளார்.