ரூ.118 கோடியில் பணிகள் தீவிரம்; மார்ச்சில் ஹைட்ரஜன் ரயில் ஓடும்
17 கார்த்திகை 2024 ஞாயிறு 03:29 | பார்வைகள் : 140
முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, 2025 மார்ச்சில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்' என, ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், தற்போது, 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
காலத்துக்கு ஏற்ப, ரயில்வேயின் புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவதில், ஐ.சி.எப்., முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில், ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ரயில்வே, 118 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச்சில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
டீசல், மின்சாரத்தை தொடர்ந்து, முதல் முறையாக ஹைட்ரஜன் ரயிலை இந்தியாவில் தயாரித்து வருகிறோம். ஹைட்ரஜன் எரிபொருள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடும்.
எனவே, இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். ஆரம்பத்தில் தயாரிப்பு செலவு, சற்று அதிகமாக இருந்தாலும், டீசல், மின்சாரத்தில் ஓடும் ரயில்களின் இயக்க செலவை ஒப்பிடும் போது, ஹைட்ரஜன் ரயிலின் இயக்கச் செலவு குறைவாக இருக்கும்.
முதல் கட்டமாக, குறுகிய துாரத்தில் செல்லும் ரயிலாக இயக்கப்படும். மொத்தம், 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், தலா, 84 பேர் பயணம் செய்யலாம். கழிப்பிட வசதி, 'சிசிடிவி' கேமரா, தானியங்கி கதவுகள் இருக்கும்.
ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் வசதியுடன், சொகுசு இருக்கைகளும் உண்டு. மணிக்கு, 90 கி.மீ., வேகம் வரை செல்லும். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து, ரயில்வே வாரியம் முடிவு செய்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.