லண்டனில் இருந்து நியூயார்க் வரை வெறும் 29 நிமிடங்களில்... எலோன் மஸ்க் புதிய திட்டம்
17 கார்த்திகை 2024 ஞாயிறு 07:08 | பார்வைகள் : 122
அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் முன்னெடுக்கும் கனவுத் திட்டங்கள் பல செயல்பாட்டுக்கு வரும் என்றே நம்பப்படுகிறது.
டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இதனையடுத்து தமது அமைச்சர்களை தெரிவு செய்யும் பணிகளை அவர் முன்னெடுத்து வருகிறார்.
இதனையடுத்து, DOGE என்ற செயல்திறன் அமைப்பை உருவாக்கி, அதற்கு டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமியை தலைவர்களாக நியமித்துள்ளார் ட்ரம்ப்.
இந்த நிலையில் தமது SpaceX நிறுவனத்தின் கனவுத் திட்டமான Earth-to-Earth விண்வெளி பயண திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
இந்த திட்டமானது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது சோதனை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. மேலும், இந்த திட்டம் எதிர்பார்த்தது போன்று வெற்றி பெற்றால், முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கண்டங்களுக்கு இடையேயான பயணத்தை செயல்படுத்த முடியும் என எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், ஸ்டார்ஷிப்பால் ஒவ்வொரு பயணத்திற்கும் 1,000 பயணிகள் வரை கொண்டு செல்ல முடியும். மட்டுமின்றி, பூமியின் மேற்பரப்புக்கு இணையான சுற்றுப்பாதையில் பறப்பதால் நொடிகளில் பல நாடுகள் கடந்து செல்ல முடியும்.
எலோன் மஸ்க் குறிப்பிடுகையில், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து றொரன்ரோவிற்கு 24 நிமிடங்களிலும், லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு 29 நிமிடங்களிலும், டெல்லியிலிருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு 30 நிமிடங்களிலும்,
நியூயார்க்கில் இருந்து ஷாங்காய் வரை 39 நிமிடங்களிலும் செல்ல முடியும். மஸ்கின் இந்த திட்டத்திற்கு ட்ரம்ப் அரசாங்கம் ஒப்புதல் அளிக்கும் என்றே தகவல் கசிந்துள்ளது.