நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம்: அமைச்சர் உறுதி
18 கார்த்திகை 2024 திங்கள் 02:45 | பார்வைகள் : 200
விலைவாசி உயர்வு அதிகரித்து வரும் நிலையில், நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறிது நிவாரணம் வழங்கும்படி, சமூக வலைதளத்தில் ஒருவர் கோரிக்கை விடுத்தார். 'உங்களுடைய ஆலோசனைகளை அரசு கவனிக்கும்' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
விலைவாசி உயர்ந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் சில்லரை பணவீக்கம், 6.21 சதவீதமாக இருந்தது.
இதுபோல, உணவுப் பொருட்களுக்கான விலை செப்.,ல் 9.24 சதவீதமாக இருந்து, கடந்த மாதம் 10.87 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில், துஷார் சர்மா என்பவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
'நாட்டுக்காக உங்களுடைய பங்களிப்பு மற்றும் முயற்சிகளை வெகுவாக பாராட்டுகிறோம். நீங்கள் எங்களுடைய மரியாதையை பெற்றுள்ளீர்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறிது நிவாரணம் அளிக்கும்படி உங்களை தாழ்மையுடன் கேட்கிறேன்.
இது சற்று சவாலானது என்பது தெரிந்தபோதும், இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன் என, துஷார் சர்மா பதிவிட்டிருந்தார்.
இதற்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதில்:
உங்களுடைய கனிவான வார்த்தைகள் மற்றும் புரிதல்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் கவலையை புரிந்து கொண்டுள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு, மிகவும் பொறுப்பான அரசு. மக்களின் குரல்களை கேட்டு, அதற்கு பதிலளிக்கக் கூடியது. உங்களுடைய புரிதல்களுக்கு மீண்டும் நன்றி. உங்களுடைய ஆலோசனைகள் மதிப்புமிக்கவை.
இவ்வாறு அவர் கூறினார்.