மோடி ஜி20 மாநாட்டின் விவாதங்களில் பங்கேற்க உற்சாகம்!
18 கார்த்திகை 2024 திங்கள் 02:49 | பார்வைகள் : 217
பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜி20 மாநாட்டின் விவாதங்களில் பங்கேற்க உற்சாகமாக இருக்கிறேன் என பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா - இந்தியா இடையே, 60 ஆண்டுகளாக நல்லுறவு நீடித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை பயணமாக நைஜீரியா சென்று இருந்தார். அவருக்கு தலைநகர் அபுஜாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர், அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்துப் பேசினார்.
நைஜீரியாவில், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் இரண்டாவது உயரிய தேசிய விருதான, 'கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் த நிகர்' என்ற விருது அளித்து கவுரவிக்கப்பட்டது. அவர் நைஜீரியா பயணத்தை முடித்துவிட்டு பிரேசில் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரேசிலில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மாநாட்டில் பங்கேற்க உள்ள பல நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். பிரேசிலில் வரவேற்பு அளிக்கப்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு வந்திருக்கிறேன். உச்சிமாநாட்டின் கலந்துரையாடல்களுக்காகவும், தற்போதுள்ள பல்வேறு உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான உரையாடல்களில் ஈடுபடவும், நான் உற்சாகமாக இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.