சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதல்
12 ஐப்பசி 2024 சனி 06:34 | பார்வைகள் : 1043
கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் - கவரைப்பேட்டை மார்க்கத்தில், 'லுாப் லைனில்' நின்றிருந்த சரக்கு ரயில் மீது, நேற்றிரவு 8:27 மணியளவில் பயங்கரமாக மோதியது.
இரவு நேரத்தில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தில், 13 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன; 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாக, முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. ஒடிசா மாநிலத்தில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தை போலவே, இந்த சம்பவமும் இருப்பதால், பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மைசூரில் இருந்து, சென்னை வழியாக தர்பங்கா பகுதிக்கு, 3,047 கி.மீ., தொலைவு செல்லும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. பாக்மதி எக்ஸ்பிரஸ் எனப்படும் இந்த ரயில், நேற்று காலை, 10:34 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டது.
மொத்தம் 27 பெட்டிகளில், 1,300க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். இன்று மதியம் 2:25க்குள் தர்பங்கா செல்ல வேண்டிய ரயில் இது.
இந்த ரயில், இரவு 7:37க்கு, சென்னை பெரம்பூர் வந்தடைந்தது. அங்கிருந்த பயணியரை ஏற்றிக் கொண்டு, வியாசர்பாடி ஜீவா வழியாக, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, பயணத்தை தொடர்ந்தது.
லுாப்'பில் நுழைந்த ரயில்
இரவு, 8:27 மணிக்கு பொன்னேரி வந்த அந்த ரயிலுக்கு, மெயின் லைனில் தொடர்ந்து செல்ல, 'சிக்னல்' தரப்பட்டது. அதன்படியே பயணித்த ரயில், கவரைப்பேட்டை அருகே வந்ததும், மெயின் லைனில் செல்லாமல், 'லுாப்' லைனுக்குள் திடீரென புகுந்து, மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் பயணித்தது.
இந்த லுாப் லைனில், கடந்த இரண்டு நாட்களாக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தேவைப்படும்போது இயக்கலாம் என்பதால், இன்ஜின் இல்லாமல், அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில், லுாப் லைனுக்குள் வேகமாக வந்த விரைவு ரயில், சரக்கு ரயிலின் பின் பக்கம் பயங்கரமாக மோதியது. இதில், விரைவு ரயிலின் ஆறு பெட்டிகள் கவிழ்ந்தன; ஆறு பெட்டிகள் தண்டவாளத்தில் தடம்புரண்டன. மொத்தம் 13 பெட்டிகள் சேதமடைந்தன.
'டமார்' சத்தம்
விழுந்த வேகத்தில் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரியத் துவங்கின. சரக்கு ரயிலில் இருந்த பார்சல் பெட்டியும் பலத்த சேதம் அடைந்துள்ளது.
இரு ரயில்கள் மோதியதால் எழுந்த சத்தத்தை கேட்டும், பெட்டிகள் விழுந்து தீப்பிடித்து எரிவதை கண்டும், அக்கம்பக்கம் வசிப்பவர்கள் ஓடிவந்தனர்.
காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களும், அவசர ஊர்திகளும் அங்கு விரைந்தன.
கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., அண்ணாதுரை தலைமையில், 70க்கும் அதிகமான போலீசார், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களும் மீட்பு பணிகளுக்கு உதவினர்.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி விபத்து நடந்ததால், அந்த வழியாக சென்ற வாகனங்களில் சென்றவர்களும், மீட்புப் பணியில் உதவினர்.
விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத வகையில், ரயில் தண்டவாளங்களின் அருகே சுவர் எழுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனால், மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த ரயில் பயணிகளை துணை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரயில் விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி முழுதும் இருளில் மூழ்கியது. இதனால், மீட்பு பணிகளை மேற்கொள்வது மீட்பு குழுவினருக்கு சவாலாக இருந்தது. தீயணைப்புத் துறை வசம் உள்ள பிரத்யேக மின் விளக்குகளை பயன்படுத்தி, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ரயில் விபத்தை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால், புறநகர் ரயில் பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ரயிலில் பயணித்த மற்ற அனைவரும், வேறொரு ரயில் மூலம், சென்னை சென்ட்ரலுக்கு அழைத்து வரப்பட்டு, உணவு, இருப்பிடம் ஆகியவை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து விசேஷ ரயில் மூலம், தர்பங்கா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் தீவிரம்
தேசிய பேரிடர் மீட்பு படையினர் 100பேர், ரயில்வே ஊழியர்கள் 250பேர் என மொத்தம் 350பேர் விபத்துக்குள்ளான ரயில் தடத்தை விரைவாக சீரமைத்து வருகின்றனர்.
இவ்விபத்து காரணமாக இன்று(அக்.,12) பொன்னேரி - கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உதவி எண்கள் அறிவிப்பு
ரயில் விபத்து தொடர்பாக பயணிகள் குறித்த தகவல்களுக்காக 04425354151, 04424354995 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வர் உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி தலைமைச் செயலாளர் முருகானந்தம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், அமைச்சர் நாசர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
சென்னை - டெல்லி, ராமநாதபுரம் - செகந்திராபாத், காக்கிநாடா - தன்பத், திருச்சி - ஹவுரா எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.