Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., அரசை அகற்ற வேண்டிய நேரம்: ராமதாஸ்

தி.மு.க., அரசை அகற்ற வேண்டிய நேரம்: ராமதாஸ்

12 ஐப்பசி 2024 சனி 10:02 | பார்வைகள் : 450


எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மக்கள் விரோத அரசாக திகழும் தி.மு.க., அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது, '' எனக்கூறியுள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 3 இடங்களில் அரசை கண்டித்து 3 இடங்களில் பொதுக்கூட்டம் நடக்கும் என அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 450க்கும் கூடுதலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஓய்வு பெற்றவர்களால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. குத்தகை முறை பணி நியமனங்களின் மூலம் இளைஞர்களை அடிமாட்டு சம்பளத்திற்கு பணியமர்த்துகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு அஞ்சி, தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை உத்தரவாதத்தை தி.மு.க., அரசு மறுக்கிறது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இரண்டரை ஆண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்றுவரை அதை நிறைவேற்ற அரசு மறுக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மூன்றரை ஆண்டுகளாக செயல்படுத்த தி.மு.க., அரசு மறுக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி பத்திரப்பதிவு கட்டணம், வாகன வரி என எந்தெந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க முடியுமோ, அனைத்து வழிகளிலும் மக்களிடம் பகல் கொள்ளை நடத்துகிறது. தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட்ட அனைவரும் தங்களின் செயலுக்கு வருந்தி பரிகாரம் தேட துடிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு சென்றுவிட்டன.

அனைத்து நிலையிலும் ஆட்சிக்கு எதிரான அனல் தகிக்கிறது. அரசு அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தி.மு.க., அரசு என்றாலே அவலம் தான். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மக்கள் விரோத அரசாக திகழும் தி.மு.க., அரசை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தி.மு.க., அரசின் அவலங்களையும், மக்கள் விரோதப் போக்கையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள் விரோத தி.மு.க., அரசுக்கு எதிராக சிதம்பரம் மற்றும் விருத்தாசலத்தில் அக்.,17 ம் தேதியும், திண்டிவனத்தில் அக்.,20ம் தேதியும், சேலத்தில் அக்., 26ம் தேதியும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்