காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா
17 ஐப்பசி 2024 வியாழன் 02:49 | பார்வைகள் : 1352
மாநில அந்தஸ்தில் இருந்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் முதலாவது முதல்வராக, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா நேற்று பொறுப்பேற்றார். பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த ஜம்மு பிராந்தியத்தில், அக்கட்சியின் தலைவரை தோற்கடித்த சுரேந்தர் சவுத்ரி துணை முதல்வராக பதவி ஏற்றார்.4
கடந்த 2019ல் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
இதில், ஜம்மு - காஷ்மீருக்கு மட்டும் சட்டசபை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின், முதல் முறையாக கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடந்தது.
மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. பா.ஜ., 29 தொகுதிகளை பிடித்தது. சுயேச்சைகள் நான்கு பேர் வென்றனர். அவர்கள் தேசிய மாநாடு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வராக ஒமர் அப்துல்லாவுக்கு துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
காஷ்மீரைச் சேர்ந்த ஷாகினா மசூத், ஜாவேத் தர், ஜம்முவைச் சேர்ந்த சுரேந்தர் சவுத்ரி, ஜாவேத் ராணா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் ஒரு இடம் தருவதாக ஒமர் கூறியிருந்தார். ஆனால், ''ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீட்டுத்தர போராட வேண்டியிருப்பதால், இப்போதைக்கு அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம்,'' என காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்தார்.
துணை முதல்வர் சுரேந்தர் முன்பு பாரதிய ஜனதாவிலும், மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியிலும் இருந்தவர். ஜம்மு பிராந்தியத்தில் தேசிய மாநாடு தரப்பில் வெற்றி பெற்ற ஒரே ஆள் இவர் தான்.
''புதிய அரசில், ஜம்முவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என யாரும் நினைக்கக் கூடாது என்பதால், அங்கிருந்து துணை முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த அரசு தங்களுடையது என்பதை ஜம்மு மக்கள் உணர வேண்டும்,'' என்றார், ஒமர் அப்துல்லா.
காங்., தலைவர்கள் கார்கே, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ் காரத், ராஜா, தி.மு.க.,வின் கனிமொழி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹ்பூபா முப்தி விழாவில் பங்கேற்றனர்.
அப்துல்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, மத்திய அரசு அவருடன் இணைந்து செயலாற்றும் என உறுதி கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீருக்கு ஏற்கனவே தனி சட்டம் இருந்தது. கடந்த 2009ல், ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வராக ஒமர் பதவியேற்ற போது, 'ஜம்மு - காஷ்மீர் மாநில அரசியலமைப்பு சட்டத்தின்படி' என கூறி, பதவியேற்றார்.
தற்போது, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விட்டதால், நேற்று பதவியேற்கும்போது, 'இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி' என கூறி, பதவியேற்றார்.