சாட்டிலைட் இன்டர்நெட் உரிமம் ஏலம் கிடையாது: அம்பானி, சுனில் மிட்டல் கோரிக்கை நிராகரிப்பு
17 ஐப்பசி 2024 வியாழன் 02:54 | பார்வைகள் : 1189
செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலமின்றி, நிர்வாக ஒதுக்கீடு முறையில் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது, 'ஜியோ, ஏர்டெல்' உள்ளிட்ட நிறுவனங்கள், எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கம்பிவடம், புதைவட கண்ணாடி இழை ஆகிய வழிகளில் இணைய சேவையை உள்நாட்டு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகியவை வழங்கி வருகின்றன.
தொலைதொடர்பு சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை நிறுவனங்கள் பெறுவதற்கு ஏல நடைமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட அளவு அலைக்கற்றையை ஆண்டுகள் அடிப்படையில் அரசு ஏலம் விடுவதும்; அதில் ஒரு பகுதியை, பணம் செலுத்தி உரிமம் பெற்று சேவை அளித்து கட்டணம் வசூலிப்பதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் முயற்சியில் ஜியோவும் பார்தி ஏர்டெல் நிறுவனமும் இறங்கி உள்ளன.
எனினும், உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம், பல நாடுகளில் செயற்கைக்கோள் வழி இணைய சேவையில் கொடி கட்டிப் பறக்கிறது.
இந்நிறுவனம், விரைவில் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.
அதனால், கடும் போட்டியை ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் நடத்தி உரிமம் வழங்க வேண்டும் என்று தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஜியோ நிறுவனம் அண்மையில் கடிதம் எழுதியது. ஜியோவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அதே கருத்தை பிரதமர் மோடி முன்னிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலும் வலியுறுத்தினார்.
உலகம் முழுதும் செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏல நடைமுறையின்றி, நிர்வாக ஒப்புதல் தரப்படும் நிலையில், முகேஷ் அம்பானியின் இந்த கோரிக்கை இதுவரை இல்லாதது, அரசுக்கு அழுத்தம் தரக்கூடியது என, எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் கிடையாது; நிர்வாக ரீதியான ஒதுக்கீடே வழங்கப்படும் என அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் உலகில் உள்ள நடைமுறையை தொடர இந்தியா விரும்புவதாகவும்; மாறுபட்ட வழியை கையாள விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய செயற்கைக்கோள் வழி இணைய சேவை ஓராண்டில் 36% வளரும் என கணிப்பு
2030க்குள் செயற்கைக்கோள் வழி இணைய சேவை மதிப்பு 16 லட்சம் கோடி ரூபாயை எட்ட வாய்ப்பு
வேறுபாடு?
ஏலம்குறிப்பிட்ட அலைக்கற்றை அளவை அரசு ஏலத்திற்கு விடும்போது, அதிகபட்ச தொகைக்கு கேட்கும் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதில், குறைந்தபட்ச கேட்புத் தொகைக்கு ஏற்ப, முன்பணம் செலுத்தி, பல நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் என்பதால், கடும் போட்டி இருக்கும்.அரிய இயற்கை வளத்தை சிறப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்த, ஏல முறை உதவுகிறது. மேலும், அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவதால், அதற்கேற்ப அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.நிர்வாக ஒதுக்கீடுநேரடியாக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமத்தை அரசு வழங்குவது, நிர்வாக ஒதுக்கீடு எனப்படுகிறது.ஏல நடைமுறைக்கு வாய்ப்பில்லாத அல்லது, அரசுக்கு குறைந்த பயனளிக்கக்கூடிய சூழல்களில் இது கையாளப்படும். ஒதுக்கீடு பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவு செய்யும் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படும்.
முகேஷ் - மஸ்க் போட்டி?
ஏலம் இல்லாமல், நிர்வாக ஒதுக்கீட்டில் உரிமம் வழங்கும் அரசின் முடிவுக்கு, ஸ்டார் லிங்க் தலைவர் எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது நிறுவனத்தின் வாயிலாக இந்தியர்களுக்கு சிறந்த சேவையை அளிக்க விரும்புவதாகவும், அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்டார் லிங்க், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் செயற்கைக்கோள் வழி இணைய சேவையை இந்தியாவில் விரைவில் துவங்க உள்ளதன் வாயிலாக, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, எலான் மஸ்க் இடையே கடும் வர்த்தக போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.