இந்தியாவைப் பற்றி பேச தடை - பாகிஸ்தான் கேப்டன் கூறிய காரணம்

17 ஐப்பசி 2024 வியாழன் 10:17 | பார்வைகள் : 2836
பாகிஸ்தான் அணியில் இந்தியா குறித்து பேசுவதற்கு தடை விதித்துள்ளதாக கேப்டன் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
ஓமன் நாட்டில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான Emerging ஆசிய கிண்ணத்தொடர் நடைபெற உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்க உள்ள இந்தத் தொடர் 18ஆம் திகதி தொடங்குகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை முகமது ஹாரிஸ் (Mohammad Haris) கேப்டனாக செயல்பட்டு வழிநடத்த உள்ளார். அவர் தங்கள் அணியில் இந்தியா குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து முகமது ஹாரிஸ் மேலும் கூறுகையில், "உங்களிடம் ஒரு விடயத்தை நான் கூறுகிறேன். முதல் முறையாக எங்களுடைய அணியில் இந்தியாவைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இந்தியாவைப் பற்றி மட்டும் சிந்திக்க விரும்பவில்லை.
மற்ற அணிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நான் சீனியர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று கடந்த உலகக்கிண்ண தொடரிலும் விளையாடியுள்ளேன். எப்போதும் இந்தியா குறித்து நினைக்கும்போது அது மனதளவில் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்குகிறது.
நாங்கள் மற்ற அணிகளையும் எதிர்கொள்ள வேண்டும். எங்களுடைய அணியில் தற்போது இந்தியா பற்றி பேசுவதை தடை செய்துள்ளோம். அதனால் இதுவரை இந்தியாவைப் பற்றி எங்கள் அணியில் நாங்கள் பேசவில்லை. இந்தியா போலவே அனைத்து அணிகளையும் நாங்கள் மதித்து வெற்றி பெற விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.