ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது

17 ஐப்பசி 2024 வியாழன் 10:24 | பார்வைகள் : 4103
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஏபி டிவில்லியர்ஸ், அலைஸ்டர் குக், நீத்து டேவிட் ஆகியோர் ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் இணைந்துள்ளனர்.
கிரிக்கெட் உலகில் சிறந்து விளங்கிய ஜாம்பவான்களை போற்றும் வகையில் 2009ம் ஆண்டு ஐசிசி வாழ்நாள் சாதனனையாளர் விருதை அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில் இந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ”மிஸ்டர் 360” என போற்றப்படும் ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் மற்றும் இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நீத்து டேவிட் ஆகியோர் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான பங்களித்த வீரர்களுக்கான “ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் பட்டியல்” இணைக்கப்பட்டுள்ளனர்.
அலைஸ்டர் குக் இங்கிலாந்து அணிக்காக 250க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் 12472 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணிக்காக 12,000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மேலும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இவர் 2018ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
மிஸ்டர் 360 என போற்றப்படும் ஏபி டிவில்லியர்ஸ் இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக ஒட்டு மொத்தமாக 20,000க்கும் மேற்பட்ட ஒட்டங்களை குவித்துள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிவேக 50, 100, மற்றும் 150 ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான நீத்து டேவிட், சர்வதேச டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவரது இந்த சாதனையை இன்று வரை முறியடிக்க முடியவில்லை.
நீத்து டேவிட் இந்தியாவுக்காக மொத்தம் 97 ஒருநாள் போட்டிகள், 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி-க்கு பிறகு இந்த சாதனை பட்டியலில் இணைந்த 2 வது வீராங்கனை என்ற சாதனையை நீத்து டேவிட் படைத்துள்ளார்.