ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி - தொகுதி உடன்பாடு!
20 ஐப்பசி 2024 ஞாயிறு 07:26 | பார்வைகள் : 1209
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ., - காங்., கூட்டணிகள் சுறுசுறுப்பாக பேச்சு நடத்தி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் அம்மாநிலத்தில், 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நவம்பர் 13, 20ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 23ல் நடந்து முடிவு அறிவிக்கப்படும்.
லோக்சபா தேர்தலை போலவே, சட்டசபை தேர்தலிலும், 'இண்டி' கூட்டணி பேனரில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட முடிவு செய்துள்ளன.
முக்தி மோர்ச்சாவும், காங்கிரசும், 70 தொகுதிகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முடிவு செய்துள்ளன. மீதி, 11 இடங்களை ராஷ்ட்ரீய ஜனதா தளமும், கம்யூனிஸ்டுகளும் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று, ஒதுக்கி கொடுத்து உள்ளன.
பாரதிய ஜனதா கட்சியும், அனைத்து ஜார்க் கண்ட் மாணவர் சங்கமும் மற்றொரு கூட்டணி. சிறு கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும், பஸ்வானின் லோக் ஜனசக்தியும் இதில் இடம் பெற்றுள்ளன.
முறையே, இரண்டு மற்றும் ஒரு தொகுதியை அவற்றுக்கு கொடுத்து விட்டு, இரு முக்கிய கட்சிகளும், 68:10 என, தொகுதிகளை பங்கிட்டுள்ளன.
தலைநகர் ராஞ்சியில் முக்தி மோர்ச்சா, காங்., தலைவர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.
பின், பேட்டி அளித்த முதல்வர் ஹேமந்த் சோரன், “ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. அது முடிந்ததும், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்துள்ளதால், மக்கள் மீண்டும் எங்களுக்கு ஆதரவு தருவர். ஆட்சியை தக்க வைப்போம்; எந்த சந்தேகமும் வேண்டாம்,” என்றார்.
லாலு கட்சி போர்க்கொடி
வெறும், 11 தொகுதிகளை கொடுத்து, அதை கம்யூனிஸ்டுகளுடன் பகிர்ந்து கொள்ளும்படி சோரன் சொன்னதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கடுப்பாகி விட்டது.
''யாருடைய உதவியும் இல்லாமலே, 15 முதல் 18 இடங்களில் பாரதிய ஜனதாவை வீழ்த்தும் சக்தி எங்களுக்கு இருக்கிறது. ஆனால், எங்களை அழைக்காமலே முக்தி மோர்ச்சாவும், காங்கிரசும் பேசி முடித்துள்ளன.
''தொகுதி பங்கீடு என்பது, 2 நிமிடத்தில் சமைக்கும் நுாடுல்ஸ் கிடையாது. அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். மாற்று வழிகளும் எங்களுக்கு தெரியும்,'' என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனோஜ் குமார் ஜா கூறினார்.
டி.ஜி.பி., நீக்கம்
ஜார்க்கண்ட் பொறுப்பு டி.ஜி.பி., அனுராக் குப்தாவை உடனடியாக நீக்கும்படி, மாநில அரசுக்கு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது. லோக்சபா தேர்தலின் போது, அவருக்கு எதிராக வந்த புகார்கள் உண்மை என தெரிய வந்ததால், இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், 66 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, பா.ஜ., மேலிடம் நேற்று வெளியிட்டது.
இதன்படி, ஜார்க்கண்ட் பா.ஜ., தலைவர் பாபுலால் மராண்டி, தன்வார் தொகுதியிலும், கடந்த ஆகஸ்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், செரைகேலா தொகுதியிலும்; அவரது மகன் பாபுலால் சோரன், காட்ஷிலா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முதல்வர் ஹேமந்த் சோரனின் உறவினர் சீதா சோரன், ஜம்தாரா தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்குகிறார்.