தேர்தலில் தேச பக்தராக வேலை செய்யுங்க: கெஜ்ரிவால்!

20 ஐப்பசி 2024 ஞாயிறு 07:31 | பார்வைகள் : 3274
2025ம் ஆண்டு டில்லி சட்டசபை தேர்தலுக்கு ஆம் ஆத்மியின் திட்டம் என்ன என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
டில்லி, பிடம்புராவில் கட்சித் தொண்டர்கள் மத்தியில், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசியதாவது: ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 11 பணியாளர்கள் கொண்ட குழுக்கள் இருப்பார்கள். மண்டல பொறுப்பாளர்கள் வாக்காளர்களை நேரில் சந்தித்து பேச வேண்டும். பகத் சிங் மற்றும் மகாத்மா காந்தி போன்றவர்கள் அரை நாள் வேலை செய்திருந்தால், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. 2025 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியினராக வேலை செய்யாதீர்கள். தேச பக்தராக பணியாற்றுங்கள்.
பா.ஜ., சதி
உள்கட்சி சண்டை நடந்தால், வரவிருக்கும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்விக்கு வழிவகுக்கும். ஆம் ஆத்மியின் திட்டங்களை நிறுத்த பா.ஜ., அதிகாரம் பெற விரும்புகிறது. இலவச மின்சாரம், பெண்களுக்கான பஸ் பயணம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட ஆம் ஆத்மி அரசின் இலவசத் திட்டங்களைத் தடுக்க, பா.ஜ., சதி செய்து வருகிறது. ஆம்ஆத்மி கட்சி வெற்றிபெறாவிட்டால் அரசு பள்ளிகளுக்கு என்ன நடக்கும் என்று நான் கவலைப்படுகிறேன் .மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் உயரும்.
திட்டங்கள்
நான், சிறையில் இருந்த காலத்தில், சாலை சீரமைப்பு, முதியோர் ஓய்வூதியம், மருத்துவமனைகளில் இலவச மருந்துகள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பா.ஜ., நிறுத்த முயற்சி செய்தது.
இப்போது மக்கள் இலவச மின்சாரம், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். அவர்கள் 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். எனவே ஆம் ஆத்மி அரசாங்கம் வழங்கும் திட்டங்களை முடக்குவதற்கு அவர்கள் டில்லியில் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.